மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
தடுப்பூசியால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் வருமா? உண்மை என்ன? விளக்கும் அரசு மருத்துவர்!
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் காரணமாக ஆட்டிசம் (Autism) ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கட்டுரையை சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இது பெரும் விவாதப்பொருளான நிலையில் விகடன் சார்பில் இதற்கான விளக்கத்தைப் பெற முயற்சித்தோம். அந்த வகையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மனநல பிரிவு தலைவராக உள்ள டாக்டர் சுகுதேவ் அவர்களிடம் பிரத்யேகமாகப் பேட்டி எடுத்தோம். இனி அந்த பேட்டி விரிவாக...

"குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா?"
"குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்பட்டது என்பதற்கான பெரிய அளவிலான சான்றுகள் எதுவும் இதுவரை இல்லை.
ஆனால், சாதாரண காய்ச்சல் வயிற்றுப்போக்கு போன்ற மிகச் சாதாரணமான பக்க விளைவுகள் என்பது ஏற்படும். சில நாள்களுக்குப் பிறகு அது தானாகவே நின்றுவிடும். மற்றபடி நீண்ட கால பக்க விளைவுகள் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடையாது.
ஒரு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே அது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? என்பதை முழுமையாக ஆய்வு செய்ததற்கு பிறகுதான் அறிமுகப்படுத்துவார்கள். பல ஆண்டுகளாக இப்படித்தான் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது."
"ஆனால், தடுப்பூசியினால் நீண்ட கால பக்கவிளைவு ஏற்படும், குறிப்பாக ஆட்டிசம் ஏற்படும் என அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கட்டுரையை சுட்டிக்காட்டி ஸ்ரீதர் வேம்பு ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார் அதை எப்படிப் பார்ப்பது? "
"இதுவரை வந்திருக்கக்கூடிய அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம், தடுப்பூசிகள் ஆட்டிசம் ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது என்று எங்கும் சொல்லப்படவில்லை. அந்த குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரை விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
1990-களில் தடுப்பூசியால் ஆட்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது என்ற பேச்சு பரவலாக இருந்தது. தயோ மெசான் எனும் ஒரு வகை பொருள் அப்போதைய தடுப்பூசிகளில் சேர்க்கப்பட்டு வந்தது, அதுதான் ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணம் எனச் சொல்லப்பட்டது.
ஆனால், அது தொடர்பாக நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்யப்பட்டதில் அது பொய் என நிரூபிக்கப்பட்டது. இருந்தாலும்கூட சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அந்த குறிப்பிட்ட பொருள் தடுப்பூசிகளில் சேர்க்கப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.
அதே நேரத்தில் ரூபெல்லா எனப்படும் ஒருவகை அம்மை நோய் ஏற்படுவதன் மூலம் குழந்தைகளுக்கு ஆட்டிசம் வரும் என நிரூபிக்கப்பட்டிருந்தது. பிறகு அதற்குத் தடுப்பூசி கொண்டுவரப்பட்டது. எனவே தடுப்பூசிக்கும் ஆட்டிசம் பாதிப்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது."

"ஆட்டிசம் என்பது நோயா ? குறைபாடா? மனச்சிதைவா? அல்லது மன வளர்ச்சி குறைவா? "
"ஆட்டிசம் என்பது ஒரு வகை நோய். மருத்துவத்துறையில் இது மனநோய் பிரிவின் கீழ்தான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு கொள்வதில் சிக்கல்.
விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு சராசரி மனிதனால் ஒரு தகவல் தொடர்பை எப்போது தொடங்க வேண்டும், எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், எப்போது அதை முடிக்க வேண்டும் எனத் தெரிந்திருக்கும். ஆனால், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளால் அதைச் செய்ய முடியாது.
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு சராசரி குழந்தையால் பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு தாயின் முகத்தைப் பார்த்து சிரிக்க முடியும். தன் தாய் இவர்தான் எனக் கண்டுகொள்ள முடியும்.
ஆனால், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு இதில் சிரமம் இருக்கும். அதேபோல ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பது ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை கண்டறிவதற்கான மிக எளிமையான ஒரு நடைமுறை.
மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆட்டிசம் இருக்காது. அதேநேரத்தில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மூளை வளர்ச்சி குறைபாடு இருக்கும் எனவும் சொல்ல முடியாது."
"ஆட்டிசம் நோய் ஏற்படுவதற்கான மிக முக்கியமான காரணம்? "
"மரபு ரீதியிலான காரணங்கள் தான் முதன்மையானது. ஆணோ பெண்ணோ மிகத் தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது."
"மரபு ரீதியிலான காரணங்கள் என்றால் தாயின் கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய ஏதேனும் தொழில்நுட்பம் இருக்கிறதா?"
"இப்போதைக்கு அதற்கான சாத்தியக்கூறு எதுவும் இல்லை. பிறந்து 18 மாதங்களுக்கு பிறகுதான் அது வெளியே தெரியத் தொடங்கும்.
ஆனால், ஆராய்ச்சிகள் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்னும் முன்கூட்டியே இந்த ஆட்டிசம் குறைபாட்டைக் கண்டறிய முடியுமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்."

"ஆட்டிசம் வராமல் தடுக்க ஏதேனும் தடுப்பூசி இருக்கிறதா?"
"அது போன்று எந்தவொரு சிகிச்சை முறையோ அல்லது தடுப்பூசியோ இதுவரை இல்லை. ஆனால், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆய்வுகள் இதற்காக நடந்து கொண்டிருக்கிறது"
"ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உடல் உறுப்பு வளர்ச்சிகளில் ஏதேனும் பாதிப்புகள் இருக்குமா?"
"எந்த பாதிப்புகளும் இருக்காது மலச்சிக்கல் போன்ற சில சாதாரண பிரச்னைகள்தான் இருக்கும்.
ஆனால், ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவிகிதம் வரை குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தூங்குவதில் பிரச்னை, ஹைபர் ஆக்டிவிட்டி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்."
"ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுக்கும் சிகிச்சை முறை தரப்படுமா அல்லது மனநலன் சார்ந்த சிகிச்சை தரப்படுமா?"
"முதல் விஷயம், எவ்வளவு விரைவாக ஆட்டிச பாதிப்பை கண்டறிகிறோம் என்பதுதான். அதைப் பொறுத்துதான் சிகிச்சை முறை என்பதும் மாறும்.
ஆரம்ப கட்டங்களில் மனரீதியிலான பயிற்சிகள்தான் அதிகம் வழங்கப்படும். பிறகு, பேச்சுப் பயிற்சி வழங்குவது உடற்பயிற்சி வழங்குவது போன்றவை அடுத்தடுத்த கட்டங்களாகத் தரப்படும்.
ஆனால், மருந்துகளும் தரப்படும். அதுவும் மிகக் குறைந்த அளவில்தான் வழங்கப்படும். ஆட்டிசம் குறைபாடுடன் சேர்த்து மற்ற மனநலம் சார்ந்த பிரச்னை இருக்கும்போதுதான் மருந்துகள் தரப்படும்."

"மனநலன் சார்ந்த சிகிச்சை என்றால் அதில் குறிப்பிட்டு என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று சொல்ல முடியுமா?"
"குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே ஓரளவுக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைக் கண்டறிந்துவிடுவார்கள். பிறகு, எங்களிடம் வரும்போது ஆட்டிசம் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிவோம்.
இது மிகவும் எளிமையான முறை. மருத்துவர்கள் கேட்கக்கூடிய கேள்விகள், அதற்கு அந்தக் குழந்தைகள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் போன்றவற்றை வைத்துதான் முடிவுக்கு வருவோம்.
மற்றபடி ஸ்கேன் எடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள மாட்டோம். ஆட்டிசம் மிகக் குறைவான அளவில்தான் இருக்கிறது என்றால், அவர்கள் மற்ற குழந்தைகள் போல இருக்க முடியும்.
அதுவே தீவிரம் மற்றும் மிகத் தீவிரம் என்ற அளவில் இருக்கும்போது அவர்களுக்குத் தொடர் சிகிச்சை வழங்கப்படும்.
"ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்குச் சிறப்புத் திறன் இருக்கும் என்று சொல்கிறார்கள் அது உண்மையா?"
"ஆம் இருக்கும். ஆனால், அதைக் கண்டறிவதுதான் மிகவும் சவாலான விஷயம்.
என்னிடம் சிகிச்சை பெற்ற ஒரு குழந்தை ஆறு வயதிலேயே நூற்றுக்கணக்கான சமஸ்கிருத ஸ்லோகங்களை மனப்பாடமாக ஒப்பிக்கும் திறன் கொண்டிருந்தாள்.
இன்னொரு குழந்தைக்கு எந்தவொரு குறிப்பிட்ட ஆண்டின் தேதியைச் சொன்னாலும் அன்றைய தினம் என்ன, கிழமை என்ன என்பதை உடனடியாகச் சொல்லும் திறன் கொண்டிருந்தான்."
"ஆட்டிசத்துக்கும் மனநல பாதிப்புக்கும் என்ன வேறுபாடு?"
"குழந்தைகளுக்கு மனநல பாதிப்பு ஏற்படுவது என்பது மிகவும் குறைவு. ஏனென்றால், அவர்களுக்கு வெளியில் இருந்து வரக்கூடிய அழுத்தம் இருக்காது. எனவே, மனச் சிதைவு ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், ஆட்டிசம் என்பது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியது.
இதன் அடிப்படை வித்தியாசம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு தகவல் தொடர்பு கொள்வதில்தான் சிக்கல் இருக்குமே தவிர, அவர்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதிக திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்.
அதுவே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அவர்களுக்கு சிந்திக்கும் திறன் மற்றும் கற்கும் திறன் குறைவாக இருக்கும்."

"ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எப்போது சரி செய்ய முடியும்?"
"ஆட்டிசம் என்பது முழுமையாக சரியாகக் கூடியது அல்ல. ஆனால் அந்த பாதிப்பைக் குறைக்க முடியும். உதாரணமாக, குழந்தையால் முகத்தைச் சரியாக அடையாளம் காண முடியவில்லை என்றால், அந்தக் குழந்தைக்கு முகம் என்றால் என்ன என்று தெரியாது.
அப்போது நெற்றியில் பொட்டு வைக்கும் பயிற்சியை கொடுப்போம். அப்படி செய்யும்போது கண் எது, மூக்கு எது என்று வித்தியாசப்படுத்திப் பார்க்கும் விஷயத்தை குழந்தை தெரிந்து கொள்ளும். இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் பயிற்சி வழங்கப்படும்."
"ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை வைத்திருக்கக்கூடிய பெற்றோர்களுக்கு வீடு கிடைப்பதில் தொடங்கி பல சமூக சிக்கல்களை அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் ஆபத்தானவர்களா? ஆட்டிசம் உள்ள குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதற்குப் பிறகு திருமணம் போன்ற உறவுகளில் அவர்களால் ஈடுபட முடியுமா?"
"ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆபத்தானவர்கள் அல்ல. அவர்கள் எந்த விதமான குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள். காரணம், அவர்கள் அவர்களுடைய உலகத்தில் இருப்பார்கள்.
ஆனால், சில குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவிட்டி எனப்படும் அதிதீவிர திறன் இருக்கும். அதனால் அவர்களைக் காயப்படுத்திக் கொள்வார்களே தவிர மற்றவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள்.
சாதாரண குழந்தைகள்தான் கோபப்பட்டு செய்வார்களே தவிர இவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். ஆட்டிசம் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அவர்கள் திருமண உறவு போன்றவற்றில் ஈடுபட முடியும்."

"அரசு மருத்துவமனைகளில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றதா?"
"அரசு மருத்துவமனைகளில் ஏராளமான வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனி சிகிச்சை பிரிவு இருக்கிறது.
தினசரி சிகிச்சை வழங்குவது உட்பட அதற்கான சிறப்பு மருத்துவர்கள் வரை அனைத்தும் செய்து தரப்பட்டிருக்கிறது. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சைகளுக்காக ஒரு லட்ச ரூபாய் வரை வழங்கப்படுகின்றது.
ஆனால், பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. அதனால், பெரும்பாலானவர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருவதில்லை.
இந்தப் பேட்டி வாயிலாக அந்த விழிப்புணர்வு நிறைய பேருக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்."














