மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
கரூர்: 3D கேமரா, சாலையை அளக்கும் பணி! - இரண்டாவது நாளாக CBI அதிகாரிகள் விசாரணை!
கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அந்த கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம், நாட்டையே உலுக்கியது.
இது தொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், முதல் கட்டமாக நேற்று சி.பி.ஐ எஸ்.பி பிரவீன் குமார் தலைமையில், கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் மூன்று குழுக்களாக பிரிந்து சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் முக்கிய கடைகளில் உள்ள சாலையோர சி.சி.டி.வி கேமராக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
இது தவிர, அதிநவீன 3D கேமரா மூலம், அதிகளவில் கூட்டம் நின்ற கரூர் போதூர் பிரிவு சாலை முதல் வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் கரூர் வடிவேல் நகர் பேருந்து நிறுத்தம் வரை சுமார் 700 மீட்டர் அளவு பதிவிடும் பணியினை துவங்கினர்.

இந்த கேமரா மூலம் சாலை நடுவே பொருத்தி சாலையின் இரு புறமும் சுற்றளவு, நீளம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட்டு, இதில் எவ்வளவு பேர் நிற்கமுடியும் என்பதை கணக்கிட முடியும் என்பதால், நேற்று 7 மணி நேரம் சுமார் 400 மீட்டர் அளவு ஒளிப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணி அளவில், சி.பி.ஐ ஏ.எஸ்.பி முகேஷ் குமார் தலைமையில் கரூர் வேலுச்சாமிபுரம் அமைந்துள்ள கரூர் -ஈரோடு நெடுஞ்சாலையில், அதிநவீன 3D கேமரா மூலம், மீதமுள்ள 300 மீட்டர் அளவிடும் பணியை துவங்கினர்.
இதனால், கரூர் -ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் இரண்டாவது நாளாக செய்யப்பட்டது. எனவே, மாற்று வழியில் கோவை சாலை வழியாக போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை வார சம்பள தினம் என்பதால், வேலுச்சாமிபுரம் வடிவேல் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றத்தால், சாலையோர கடை வைத்திருப்போர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சி.பி.ஐ அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இன்று மாலை 4.30 மணி அளவில் சி.பி.ஐ அதிகாரிகள் முடித்துக் கொண்டனர்.
இதன்பின்னர் இன்று காலை 6 மணி அளவில் கரூர்- ஈரோடு சாலையில் திருப்பி விடப்பட்ட பேருந்துகள், பின்னர் கரூர்- ஈரோடு சாலையில் மாலை 4.30 மணிக்கு மேல் மீண்டும் தொடர்ந்து இயங்க அனுமதிக்கபட்டது.
சம்பவ இடத்தில போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு நாட்களில் 700 மீட்டர் அளவுக்கு துல்லியமாக அளவிட்டு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இதில், விஜய் வாகனம் நின்று பேசிய இடத்தில் மட்டும் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக 3D கருவி மூலம் ஒளிப்பதிவு செய்தனர்.

இரண்டாவது கட்டமாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கு, பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ள சம்மன், த.வெ.க கட்சியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் கையில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், சி.பி.ஐ அதிகாரிகள் நேரடியாக சம்மனை வழங்குவதற்காக திட்டமிட்டுள்ளனர். பின்னர், அவர்களிடம் விசாரணை துவங்கப்பட உள்ளதாக சி.பி.ஐ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.




















