`நீக்கப்பட்ட செங்கோட்டையன்' - எடப்பாடி வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசன...
திருப்பூர்: பட்டா மாறுதலுக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது; சிக்கியது எப்படி?
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார்.
பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய காட்டூர் கிராம நிர்வாக அலுவலரான ஜெயக்குமார் ரூ. 40 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில், முதல் தவணையாக ரூ. 10 ஆயிரமும், 2-ஆவது தவணையாக ரூ. 13 ஆயிரமும் ஜெயக்குமார் பெற்றுள்ளார். இதற்கிடையே, மீதி ரூ. 17 ஆயிரத்தைத் தந்தால்தான் பட்டா மாறுதல் செய்ய முடியும் என ராமமூர்த்தியிடம் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் ராமமூர்த்தி புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில், ஆய்வாளர் கீதா லட்சுமி மற்றும் போலீஸார் ரசாயணம் தடவிய ரூ.17 ஆயிரத்தை ராமமூர்த்தியிடம் கொடுத்து அனுப்பினா்.
அந்தப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் பெற்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே காட்டூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி இருவர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவதாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















