`நீக்கப்பட்ட செங்கோட்டையன்' - எடப்பாடி வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசன...
அதிமுக: 9 மாத பனிப்போர்; திடீர் டெல்லி பயணங்கள்! - செங்கோட்டையனின் நீக்கமும் பின்னணியும்!
'செங்கோட்டையன் நீக்கம்!'
அதிமுகவின் சூப்பர் சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்புக்கு பின்னால் 9 மாத பனிப்போரின் கதை இருக்கிறது. இத்தனை மாதங்களாக அவ்வபோது பற்றி எரிந்து பொசுங்கிக் கொண்டிருந்த செங்கோட்டையன் விவகாரத்திற்கு எடப்பாடி இப்போது ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறார்.

கட்சிக்குள் எடப்பாடியை விட ரொம்பவே சீனியர் செங்கோட்டையன். அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலேயே எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டு எம்.எல்.ஏ ஆனவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் முக்கிய சகாவாக இருந்தவர். கடைசி வரைக்கும் ஜெயலலிதாவின் பிரசார பயணங்களை பக்காவாக திட்டமிட்டுக் கொடுத்தவர் செங்கோட்டையனே.
ஜெ.வின் இறப்புக்குப் பிறகு, கூவத்தூரில் செங்கோட்டையனையே அடுத்த முதல்வராக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் உண்டு. ஆனால், வேறு சில காரணங்களால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகிறார்.
சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டி கட்சியை மொத்தமாக கட்டுப்பாட்டில் எடுக்கிறார். எடப்பாடியின் கீழ் மொத்த கட்டுப்பாடு செல்வதிலும் கட்சியின் அடுத்தடுத்த தோல்விகளிலும் அப்செட்டானவர்களில் மிக முக்கியமானவர் செங்கோட்டையன்.
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டுமென ஒரு 6 முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியை சந்தித்துப் பேசினார்கள் இல்லையா? அதில் செங்கோட்டையனும் முக்கிய சூத்திரதாரியாக இருந்திருக்கிறார். அங்கிருந்தே முரண்பாடுகள் தொடங்க ஆரம்பித்துவிட்டது.
'முரண்பாடு வெளிப்பட்ட தருணம்!'
கடந்த பிப்ரவரியில் அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார்.
ஏன் கலந்துகொள்ளவில்லை? என கேள்வி எழுந்த போது, 'என்னை வளர்த்தெடுத்த எம்.ஜி.ஆர், ஜெயலலில்தாவின் படங்கள் அங்கே வைக்கப்படவில்லை. அதில் எனக்கு அதிருப்தி.' என செண்டிமெண்ட்டாக ஒரு காரணத்தை கூறினார்.
வெளிப்படையாக தன்னுடைய அதிருப்தியை கூறியவர், அடுத்தடுத்த வாரங்களில் டெல்லிக்கு பயணப்பட்டார். இந்த காலக்கட்டமும் ரொம்பவே முக்கியமானது. ஏனெனில், ஏப்ரல் 12 இல் எடப்பாடி அமித்ஷாவுடன் கரம் கோர்த்து கூட்டணியை அறிவிக்கிறார். அதற்கு முந்தைய வாரங்களில் செங்கோட்டையனின் டெல்லி பயணம் நிகழ்கிறது.
பாஜகவின் டெல்லி மேலிடம் செங்கோட்டையனை வைத்து எடப்பாடிக்கு செக் வைக்க நினைப்பதாக அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் பேசப்பட்டது.
அமித் ஷா, நிர்மலா சீதாராமன் என இருவரையும் செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார். ஆனால், ஏப்ரல் தொடங்கியவுடன் எடப்பாடியின் மனநிலை மாற தொடங்கியது. எடப்பாடியே திடீரென டெல்லிக்கு வண்டியை திருப்பினார். அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்தார்.
அடுத்த வாரமே அமித் ஷா தமிழகம் வந்தார். அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவு பெற, பதவி நீட்டிக்கப்படாமல் நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ.க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த சூழலில், எடப்பாடி அமித் ஷாவுடன் கரம் கோர்த்து கூட்டணியை உறுதி செய்தார். இதன்பிறகு செங்கோட்டையன் கொஞ்சம் சைலென்டாக இருந்தார்.
சில கூட்டங்களில் எடப்பாடியின் பெயரை சொல்வதை தவிர்த்தாரே தவிர, பெரிதாக வேறெந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.

'செங்கோட்டையன் விதித்த கெடு!'
செப்டம்பர் முதல் வாரத்தில் திடீரென செய்தியாளர்களை சந்தித்து மனம் விட்டு பேசப்போகிறேன் என்றவர், ஈரோட்டில் அவர் அலுவலகத்தில் செய்தியாளர்களையும் சந்தித்தார்.
'கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது குறித்து 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்.' என எடப்பாடிக்கு கெடு விதித்தார்.
எடப்பாடியின் பிரசாரத்தின் போது ஒரு சிலர் எடப்பாடிக்கு எதிராக கோஷம் போட்டனர். மறுநாளே முக்கிய முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை பறித்தார்.
ஹரித்துவாருக்கு செல்வதாகக் கூறி செங்கோட்டையன் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டார். ஆனால், இந்த முறை அவரின் பயணம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை எனக் கூறப்பட்டது.
டெல்லியிலிருந்து அவர் எதிர்பார்த்த சப்போர்ட் கிடைக்கவில்லை. அவர் விதித்த கெடுவான 10 நாள்கள் ஆகியும் எடப்பாடி ஓ.பி.எஸ், டிடிவியை கட்சிக்குள் சேர்ப்பது பற்றி யோசிக்கவில்லை.
மீண்டும் செங்கோட்டையனிடம் மைக் நீட்டப்பட்டது. 'நான் எங்கே கெடு விதித்தேன். ஊடகங்கள் தவறாக புரிந்துகொண்டு விட்டன.' என ஜகா வாங்கினார்.

'ஓ.பி.எஸ், டிடிவி மூவ்!'
இன்னொரு தர்ம யுத்தத்தை தொடங்கும் வகையில் அதிரடியாக கெடு விதித்து பிரஸ் மீட் கொடுத்த போதும், யாரும் ஈரோட்டிலுள்ள செங்கோட்டையனின் அலுவலகத்தை நோக்கி செல்லவில்லை. போதிய ஆதரவு கிடைக்காததால் செங்கோட்டையன் பின்வாங்கிவிட்டதாக பேசப்பட்டது.
இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஓ.பி.எஸ்ஸூம் நிர்வாகிகள் கூட்டம், மாநாடு அறிவிப்பு, விஜய் புகழ் பாடுதல், முதல்வருடன் சந்திப்பு என திக்குத்தெரியாமல் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்.
இன்னொரு பக்கம் டிடிவி NDA விலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ஓ.பி.எஸ், டிடிவி இருவரும் சேர்ந்து தமிழக பாஜகவின் புதிய தலைவரான நயினார் நாகேந்திரன் மீது பாய்ந்தனர்.
'பசும்பொன்னில் மூவர்!'
இந்நிலையில்தான் திடீரென தேவர் ஜெயந்தியன்று பசும்பொன்னில் ஓ.பி.எஸ், டிடிவி, செங்கோட்டையன் மூவரும் கரம் கோர்த்தனர்.
'அதிமுகவிலிருந்து நீக்கினாலும் சந்தோஷம்தான்.' என செங்கோட்டையன் கொஞ்சம் திமிறி பேட்டி கொடுத்தார். கடந்த முறை கட்சிப் பதவியை பறித்த எடப்பாடி, இந்த முறை செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கியிருக்கிறார்.
பசும்பொன்னில் போய் மூவரும் கை கோர்த்தது எடப்பாடிக்கு மேலும் குடைச்சலை கொடுப்பதற்காகவே என்கின்றனர்.
ஏற்கெனவே தென் மாவட்டங்களில் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு அடி விழுந்த நிலையில், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஓ.பி.எஸ், டிடிவியுடன் கொங்கு மண்டலத்திலிருந்து செங்கோட்டையனும் சேர்கையில், அவரது சொந்த சமூகத்தை சேர்ந்தவரே அவருக்கு எதிராக நிற்கிறார் என எடப்பாடி மீதான தென் மாவட்டத்தினரின் கோபக்கனலை இன்னும் அதிகரிக்கும் திட்டமே என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.
துரோகிகளுக்கு கட்சிக்குள் இடமில்லை என அதிரடி நீக்க நடவடிக்கையை கையிலெடுக்கும் எடப்பாடி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர்களை எப்படி கையாளப்போகிறார் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.













