JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்'' - இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance), தனது இந்து மனைவி உஷா ஒருநாளில் கிறிஸ்துவராக மாறுவார் என்று நம்புவதாகவும், தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக வளர்க்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
உஷா, தன்னிடம் மதம் மாறும் எண்ணம் இல்லை எனப் பலமுறை கூறியுள்ள நிலையில், வான்ஸின் கூற்று மிகவும் போலியானது என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

டர்னிங் பாயிண்ட் அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய வான்ஸ், "ஆனால் அவள் கிறிஸ்துவராக மாறவில்லை என்றால், கடவுள் எல்லோருக்கும் சுதந்திரம் இருப்பதாகச் சொல்கிறார் என அர்த்தம்; அதனால் எனக்கு அது ஒரு பிரச்னையாக இருக்காது," என்றும் கூறியிருந்தார். ஆனாலும், இணையத்தில் பலரும் வான்ஸின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.
உஷா வான்ஸ் சொல்வது என்ன?
ஜே.டி. வான்ஸ் மற்றும் உஷாவுக்கு இவான், விவேக் மற்றும் மிராபெல் என மூன்று குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் குழந்தைகளின் இறைநம்பிக்கை குறித்து பழமைவாத பிரசாரகர் மேகன் மெக்கெய்னின் நிகழ்ச்சியில் பேசிய உஷா, "நாங்கள் குழந்தைகளைக் கத்தோலிக்க பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்தோம். அவர்களுக்கு இரண்டு தேர்வுகளையும் வழங்குவோம், சரியா? அவர்கள் கத்தோலிக்க முறைப்படி ஞானஸ்நானம் பெற விரும்புகிறார்களா என்பதைத் தேர்ந்தெடுக்கட்டும்" எனப் பேசியிருந்தார்.

மேலும் தனது கணவரின் நம்பிக்கையைப் பற்றிப் பேசுகையில், "நான் ஜே.டியை சந்திக்கும்போது அவர் கத்தோலிக்கராக இல்லை. எங்கள் முதல் குழந்தை பிறந்தபிறகே அவர் மாறினார். அப்போது எங்களுக்குள் நிறைய விவாதங்கள் இருந்தன. ஏனெனில் கத்தோலிக்கராக மாறும்போது, குழந்தைகளை அந்த வழியில் வளர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. நான் கத்தோலிக்கராக இல்லாதபோது, அவர் அதை எப்படி செய்வது என்பதில் பல உரையாடல்கள் நடந்தது. ஆனால் எனக்கு மதம் மாறுவதுபோன்ற சிந்தனையே இல்லை," எனப் பேசியுள்ளார்.
அத்துடன் உஷா, தான் கத்தோலிக்கர் அல்ல என்பது குழந்தைகளுக்குத் தெரியும் என்றும், இந்து பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளும் புத்தகங்களை அவர்களுக்கு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்தபோது, உஷா மற்றும் குழந்தைகளுடன் சில ஆன்மிகத் தலங்களுக்கும் சென்றிருந்தார். உஷா மற்றும் வான்ஸ் திருமணத்தில் இந்து சமயச் சடங்குகளும் பின்பற்றப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.
வான்ஸ் மற்றும் உஷாவின் மாறுபட்ட நம்பிக்கையைக் கொண்ட திருமணம் பேச்சுப் பொருளாவது இது முதன்முறையல்ல.
2016ம் ஆண்டு, உஷாவின் துல்லியமும் திறமையும் தான் தன்னை கத்தோலிக்கராக மாறச் செய்தது என வான்ஸ் குறிப்பிட்டிருந்தார். அப்போதும் அவர்மீது விமர்சனங்கள் எழுந்தன, ஏனெனில் அவர் உஷாவை “இந்துவாக” அல்லாமல் “agnostic” (அக்னாஸ்டிக் - கடவுள் உள்ளாரா இல்லையா என்பதில் உறுதியற்றவர்) எனக் குறிப்பிட்டிருந்தார்.
மறுபுறம், தன்னை இந்துவாகக் கருதும் உஷா, தனது பெற்றோரின் இந்து மத நம்பிக்கையே தன்னை நல்ல நபராக உருவாக்கியதாக நம்புகிறார். மேலும் ஜே.டியின் ஆன்மிகத் தேடலுக்குத் தானும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.













