Aan Paavam Pollathathu Movie Review |Rio Raj, Malavika | Kalai | Siddhu Kumar |C...
மேயர், அவரின் கணவர் படுகொலை வழக்கு - 5 பேருக்கு மரண தண்டனை விதிப்பு; ஹைஅலர்ட்டில் சித்தூர்!
ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு மேயராக இருந்தவர் அனுராதா. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவரின் கணவர் கட்டாரி மோகன். கடந்த 17-11-2015 ஆம் ஆண்டு மாநகராட்சி அலுவலகத்தில் தனது அறையில் இருந்த மேயர் கட்டாரி அனுராதா கைத்துப்பாக்கியால் சுட்டப்பட்டு, அரிவாளாலும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மனைவியின் மரண ஓலம் கேட்டு அவரைக் காப்பாற்றுவதற்காக ஓடிவந்த கட்டாரி மோகனும் படுபயங்கரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

சொத்து தகராறால் மேயர் தம்பதி தீர்த்துகட்டப்பட்டது தெரியவந்தது. இந்த படுகொலைகள் தொடர்பாக, மேயரின் தம்பி சிண்டு சந்திரசேகர் மற்றும் அவரின் கூட்டாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
10 ஆண்டுகளாக இவ்வழக்கு விசாரணை சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த அக்டோபர் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய தினம், `சித்தூர் மாநகரத்தில் பொது மக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம்’ என்று 144 தடை உத்தரவையும் காவல்துறை பிறப்பித்திருந்தது.
அன்று, முதல் குற்றவாளியான சிண்டு சந்திரசேகர் மற்றும் அவரின் கூட்டாளிகள் வெங்கடாசலபதி, ஜெய்பிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத், கங்கனப்பள்ளி வெங்கடேஷ் ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, `குற்றவாளிகள் 5 பேருக்கும் அக்டோபர் 31-ம் தேதி (இன்று) தண்டனை அறிவிக்கப்படும்’ என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, கொடூர கொலையாளிகளான சிண்டு சந்திரசேகர் உட்பட 5 பேருக்கும் `மரண தண்டனை’ விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இந்த அதிரடி தீர்ப்பு காரணமாக, சித்தூரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

















