`நீக்கப்பட்ட செங்கோட்டையன்' - எடப்பாடி வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசன...
``வெள்ளத்தில் மக்கள் துயரம்; முதலமைச்சர் ஸ்டாலின் சினிமா பார்க்கிறார்'' - ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், அ.தி.மு.க கிழக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியபோது, “ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதிகள் அதிமுக-வின் எஃகு கோட்டைகள். ராஜபாளையத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம்.
இந்த முறை, அந்த தோல்விக்குப் பதிலாக இருமடங்கு விலை தி.மு.க-விற்கு பரிசாக கொடுக்கப் போகிறோம். இரண்டு தொகுதிகளிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்ற வரலாற்று சாதனையை படைக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பத்து ஆண்டுகள் நான் அமைச்சராக பணியாற்றிய காலத்தில், கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து கிராமம் தோறும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் செய்தேன்.
அந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உருவாகும் சிறு சிறு பிரச்னைகளையும் கூட தி.மு.க அரசு சரி செய்ய முடியவில்லை. அந்த அளவிற்கே தான் அவர்களின் ஆட்சி செயல்படுகிறது.
தி.மு.க ஆட்சி வந்ததிலிருந்து கமிஷன், கலெக்ஷன், கரப்ப்ஷன் ஆகியவை முக்கிய பிரதான காரியங்களாக தி.மு.க கட்சியினரால் நடைபெற்று வருகின்றன.
வீடுகளுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியது அதிமுக தான். அப்போது விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர். தற்போது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.
மழைக்காலத்தில் நெல் விளைச்சல் அதிகமாக கிடைக்கிறது. அதை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை.

நெல் முளைத்து கிடப்பதை பார்த்து டெல்டா மாவட்டத்துக்கு பதறி ஓடுகிறார் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளை அழைத்து, அவர்களின் கண்ணீரை துடைத்து, தேவையான உதவிகளை செய்ய சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று கூறி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள்; ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பொழுதுபோக்கு சார்ந்த வேலைகளையே முதலமைச்சர் ஸ்டாலின் செய்கிறார் தவிர, மக்களுக்கான திட்டங்களை செய்வது கிடையாது.
தமிழக மக்கள், அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் - அனைவரும் தி.மு.க ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் வெறுப்பில் இருக்கிறார்கள்.
இதை நாம் சரியாக பயன்படுத்தி, வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.


















