`நீக்கப்பட்ட செங்கோட்டையன்' - எடப்பாடி வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசன...
``மொத்த விளக்கத்தையும் நாளை தருகிறேன்'' - அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து செங்கோட்டையன்
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "புரட்சித் தலைவர், அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓபிஎஸ் - செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்திக்கவுள்ளோம்" என்றார்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மூவரும் துரோகிகள் என்றும் பேசி வைத்துக் கொண்டு ஒன்றாக தேவர் ஜெயந்திக்கு வந்துள்ளார்கள் என்றும் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எந்த தயக்கமும் இல்லை என கூறியிருந்தார். கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இந்நிலையில், ஏற்கெனவே கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கிய செங்கோட்டையனை, தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
அது தெரிந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. K.A. செங்கோட்டையன், M.L.A., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் நீக்கம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு விரிவாக பேசுகிறேன். கட்சி அலுவலகத்தில் மட்டும் அல்லாது மொத்த விளக்கத்தையும் நாளை தருகிறேன்" என்று கூறியிருக்கிறார்.













