Aan Paavam Pollathathu Movie Review |Rio Raj, Malavika | Kalai | Siddhu Kumar |C...
கரூர் : சம்பவ இடத்தில் வீடியோ ஆதாரங்கள், நவீன கேமராக்களுடன் சி.பி.ஐ விசாரணை!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்தகொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்திட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான விசாரணை குழு நடத்திய விசாரணை ஆவணங்களை கடந்த 16-ம் தேதி கரூர் வருகை தந்த சி.பி.ஐ ஏ.எஸ்.பி முகேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சுமார் 1,316 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கைகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் ஆகியவற்றை ஒப்படைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, கடந்த 17 - ம் தேதி சி.பி.ஐ, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, கரூர் CJM-1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழில் தயாரிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு அறிக்கைகளை மொழிபெயர்ப்பு செய்யும் பணியினை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் தற்காலிக முகாம் அமைத்து சி.பி.ஐ அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் - ஈரோடு சாலையில் அமைந்துள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் சி.பி.ஐ அதிகாரிகள் நேரில் சென்று முதல் கட்ட விசாரணையை துவங்கினர்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருவதால், கரூர் - ஈரோடு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சி.பி.ஐ ஏ.எஸ்.பி முகேஷ் குமார் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்றது தொடர்பான முதல் கட்ட விசாரணை குறித்து கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கரூர் டி.எஸ்.பி செல்வராஜ் ஆகியோர், சம்பவம் நடைபெற்ற அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து சி.பி.ஐ அதிகாரிகளிடம், விஜய் வாகனம் வேலுச்சாமிபுரம் வந்த வழி, வாகனம் நின்ற இடம் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடங்கள் உள்ளிட்ட இடங்களில் சுட்டி காட்டி, விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.
அதோடு, சம்பவம் நடைபெற்ற அன்று நேரில் சம்பவத்தை பார்த்த சாட்சிகள் சிலரை சம்பவ இடத்துக்கு நேரில் வரவழைத்து, அவர்களிடமும் சி.பி.ஐ அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், நவீன கேமராக்களை கொண்டு, சாலை முழுவதும் ஒளிப்பதிவு செய்து வருகின்றனர்.

இதுதவிர, சம்பவதன்று கூட்ட நெரிசல் ஏற்படும் முன்பு எடுக்கபட்ட வீடியோக்களை கொண்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலில் 41 பேர்கள் பலியான சம்பவத்தின் விசாரணை அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ள சம்பவம், கரூர் மக்களை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.

















