Aarav Studios: ``இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகள்'' - தயாரிப்பாளராகும் பிக்பாஸ்...
கேரளா: மகன், மருமகள், பேத்திகளை வீட்டில் பூட்டி தீவைத்து கொன்ற 82 வயது முதியவருக்கு தூக்குத் தண்டனை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழ அருகே உள்ள சீனிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது (82). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் முகமது பைசல் (45), மருமகள் ஷீபா (40), பேத்திகள் மெஹ்ரா (17), அஸ்னா (13) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
ஹமீது தனது சொத்துகளை இரண்டு மகன்களுக்குமாக பங்கிட்டு வழங்கியிருந்தார். ஆனால், சொத்து பங்கிடும் போது கூறிய சில விஷயங்களை மகன் முகமது பைசல் நிறைவேற்றவில்லை எனக் கூறி, ஹமீது அவ்வப்போது பிரச்னை செய்துவந்தார்.
முகமது பைசல் தனியாக ஒரு வீடு கட்டி விரைவில் அங்கு குடியேறத் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில், 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், முகமது பைசலின் மனைவி மற்றும் மகள்கள் உள்ளிட்ட நால்வரையும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்தார் ஹமீது.

ஹமீது இந்த கொலையை அரங்கேற்றிய விதம் அந்த சமயத்தில் நாட்டையே அதிரவைத்தது. பெட்ரோல் பங்கில் இருந்து சில பாட்டில்களில் பெட்ரோல் வாங்கிய அவர், இரவு அனைவரும் தூங்கிய பின் நள்ளிரவில் சுமார் 12.30 மணிக்கு மகன் முகமது பைசலின் வீட்டுக்குச் சென்றார். பெட்ரோல் ஊற்றி தீவைக்கும் முன் சில முன்னேற்பாடுகளை செய்திருந்தார்.
மகனும் அவரது குடும்பத்தினரும் தப்பிவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, வீட்டின் வெளிப்புற வாசலையும் அடைத்தார்.
அட்டாச் பாத்ரூம் அமைந்திருந்த அறையில் அவர்கள் தூங்கியிருந்ததால், தண்ணீர் பிடித்து தீயை அணைத்துவிடக்கூடாது என்பதற்காக, வீட்டின் தண்ணீர் டேங்கில் இருந்த தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினார்.
அதையும் மீறி மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுக்கக்கூடாது எனக் கருதி, மோட்டாருக்குச் செல்லும் வயரை துண்டித்தார்.
மகன், மருமகள், பேத்திகள் தூங்கியிருந்த படுக்கையறை ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார் ஹமீது. மகன், மருமகள், பேத்திகள் தீயில் கருகி அலறித் துடித்தபோது, தன்னிடம் இருந்த சில பெட்ரோல் பாட்டில்களை திறந்து ஜன்னல் வழியாக அறைக்குள் வீசினார்.

இதற்கிடையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்தபோது, முகமது பைசலின் அறையில் தீ எரிவதை பார்த்தனர். தொடுபுழா தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீ அணைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது, பாத்ரூமுக்குள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி முகமது பைசலும், அவரது மனைவி மற்றும் இரு மகள்களும் கருகிய நிலையில் கிடந்தனர்.
கொடூரச் செயலை மேற்கொண்ட ஹமீது கைது செய்யப்பட்டார். வழக்கு தொடுபுழா 1-ஆம் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது.
அரிதான இவ்வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதைத்தொடர்ந்து, ஹமீதுக்கு மரண தண்டனையும் ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
















