மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
திருச்சி சிறையில் விசாரணைக் கைதி மர்ம மரணம்; மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் அவர் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதால் மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் மகன் சுபின்குமார் (வயது 19) கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி பெரம்பலூர் காவல்துறையினர் அவன் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததால் திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டார்.
கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி வலிப்பு நோயால் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். என் மகன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு, அவனுக்கு ஒருபோதும் வலிப்பு நோய் வந்ததில்லை. சிறை அதிகாரிகள் கூறுவது முற்றிலும் தவறானது, சந்தேகத்திற்கு உரியது.

என் மகன் காவல்துறை விசாரணையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம், அல்லது சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மரணம் அடைந்திருக்கலாம். அதனால் வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் பிறப்பித்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மறு உடற்கூராய்பு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன், "திருச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு செய்து, கபின்குமாரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று, இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்த உத்தரவின் மூலம் திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியின் திடீர் மரணத்துக்கான உண்மையான காரணம் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.




















