மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
புனே: "ரூ.10,000-க்கு 10 ஆண்டு கொத்தடிமைகளாக இருந்தோம்" - கரும்பு வெட்டும் 27 தொழிலாளர்கள் மீட்பு
மகாராஷ்டிராவில் புனே, சோலாப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவு கரும்பு விளைவிக்கப்படுகிறது. கரும்பு வெட்டுவதற்காக தொழிலாளர்கள் அண்டை மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்படுவது வழக்கம்.
அது போன்று புனே அருகில் உள்ள டவுண்ட் தாலுகாவில் இருக்கும் ராஹு என்ற கிராமத்திற்கு, அகில்யா நகர் மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகக் கொத்தடிமையாக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொத்தடிமையாக இருந்த ஒருவர் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து போலீஸ் நிலையத்தில் சென்று புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் ரெய்டு நடத்தி இரண்டு கர்ப்பிணி பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 27 பேரை மீட்டனர்.

அவர்கள் கொடுத்துள்ள புகாரில், 2015 ஆம் ஆண்டு ரூ.10 ஆயிரம் முன்பணம் கொடுத்து கரும்பு வெட்டுவதற்காக தங்களை அழைத்து வந்ததாகவும், அதன் பிறகு தங்களது சொந்த கிராமத்திற்குச் செல்லவிடாமல் தடுத்துவிட்டதாகவும், மார்க்கெட் உட்பட வெளியில் எங்குச் சென்றாலும் எங்களைப் பின் தொடர்ந்து வந்து கண்காணித்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
சொந்த ஊரில் நடக்கும் சுப காரியங்கள், இறப்புக்களுக்குக் கூட செல்லவிடாமல் துன்புறுத்தி வந்ததாகவும் அவர்கள் தங்களது புகாரில் தெரிவித்தனர்.
கடந்த 20ம் தேதி அவர்களில் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொய் சொல்வதாகக் கூறி அந்த நபரை நிலக்கிழார் தனது தோட்டத்தில் இருந்த அறையில் அடைத்து வைத்தார்.
அதன் பிறகுதான் ஒருவர் தப்பிச்சென்று போலீஸில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து 9 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரை போலீஸார் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் இரண்டு பேர் கர்ப்பமாக இருந்தனர். அவர்கள் மீட்கப்பட்ட அடுத்த நாள் ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்தது.
அவர்கள் அனைவருக்கும் வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களை போலீஸார் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அவர்களைக் கொத்தடிமையாக அடைத்து வைத்திருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




















