``41 பேர் உயிரிழந்தாலும், அன்பு குறையவே இல்லை; மக்கள் விஜய் பக்கம்தான்'' - தவெக ...
புதுக்கோட்டை டு திருச்சி சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்; அதிர்ச்சியடைந்த மக்கள்! - என்ன காரணம்?
சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சேலத்தில் இருந்து புறப்பட்டு இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில் புதுக்கோட்டை பகுதியை நெருங்கிக் கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, அந்த விமானத்தை இயக்கி வந்த பைலட், தங்கள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது குறித்து தகவல் தெரிவித்தார்.

பின்னர், அந்த விமானம் புதுக்கோட்டை - கீரனூர் சாலையில் உள்ள நார்த்தாமலை அருகே மலை மாதா கோவில் பகுதியில் தரையிறக்கப்பட்டது. அப்படி, விமானம் தரையிறக்கப்பட்டதில் பொதுமக்களுக்கோ அல்லது வாகனப் போக்குவரத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், அந்த விமானத்தில் பயணித்த விமானிகள் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விமானம் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டதைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருப்பினும், யாருக்கும் பாதிப்பு இல்லை என்று அறிந்த பிறகு, இந்த வினோத காட்சியைப் பார்ப்பதற்காக அப்பகுதியில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. அதில் பலரும், அந்த சிறிய ரக விமானம் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகளும், திருச்சி விமான நிலைய அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
அதோடு, கீரனூர் காவல் துறையினர் விமானம் தரையிறங்கிய இடத்தை உடனடியாகச் சுற்றி வளைத்து, விசாரணையை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, முன்பகுதி சேதம் ஏற்பட்டதால் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்கியதாக தெரிகிறது. இருந்தாலும், விமானம் தரையிறங்கியதற்கான உண்மையான மற்றும் முழுமையான காரணம் குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என சொல்லப்படுகிறது.

அதேபோல், விமானம் நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கியதால், புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.




















