`திருமணத்துக்கு பெண் பார்த்து கொடுங்க, மறக்கவே மாட்டேன்’ - சரத் பவாருக்கு கிராம ...
பட்டியலின பெண்கள் மீதான வன்கொடுமை; 90 வழக்குகளில் 3ல் தான் தண்டனை - அதிர்ச்சி தரும் எவிடென்ஸ் ஆய்வு
"தமிழ்நாட்டில் 7,500 க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் விசாரனையில் உள்ளது. இவற்றில் 10 சதவிகிதம் மதுரை மாவட்டத்தில் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது" என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள மதுரை 'எவிடென்ஸ்' அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியவர், "தலித் பெண்கள் மீதான அத்துமீறல்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டோம், அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது.
தமிழ்நாட்டில் கடந்த 2019 முதல் 2024 வரை நடைபெற்ற சம்பவங்களில் 90 சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதன் நிலை குறித்து ஆய்வு செய்தோம். வன்கொடுமைகளை ஆய்வு செய்வது மட்டும் நோக்கம் அல்ல, வன்கொடுமைக்கு எதிராக காவல்துறையின் நடவடிக்கைகள், வழக்கின் போக்குகள், நிவாரணங்கள், மறுவாழ்வு, குற்றவாளிகளை கைது செய்தல், குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனை கிடைத்தல் உள்ளிட்டவைகளை ஒட்டுமொத்த சமூகத்திற்கும், அரசுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 90 பெண்களின் சராசரி வயது 16 முதல் 66 வரை, இவர்களில் 5 முதல் 9 வரை படித்தவர்கள் 27 பேர், 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் 11 பேர், 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் 8 பேர், டிப்ளமோ படித்தவர்கள் 6 பேர், இளங்கலை பட்டதாரிகள் 14 பேர், முதுகலை பட்டதாரிகள் 5 பேர், படிக்காதவர்கள் 19 பேர்.
இவர்களில் பறையர் சமூகத்தினர் 51, அருந்ததியர் சமூகத்தினர் 26, தேவேந்திர குல வேளாளார் சமூகத்தினர் 8 பேர்.
48 பேர் கூலித்தொழிலாளர்கள், 9 பேர் தனியார் நிறுவன ஊழியர்கள், 2 பேர் அரசு ஊழியர்கள், ஒருவர் அரசு உதவிபெறும் நிறுவனம், 35 பேர் எந்தப் பணியும் செய்யவில்லை. இதில் திருமணமானவர்கள் 39, கைம்பெண்கள் 8, தனித்து வாழ்பவர் 4, மறுமணம் செய்தவர்கள் 3, கணவனால் கைவிடப்படவர்கள் 1, திருமணம் ஆகாதவர்கள் 35 பேர்.
தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, கடலூர் உள்ளிட்ட 26 மாவட்டஙகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், சாதி ரீதியாக இழிவான வார்த்தைகளால் பாதிக்கப்பட்டவர்கள் 55 பேர், பாலியல் ரீதியாக ஆபாசமாக அவமானப்படுத்தப்பட்டவர்கள் 8 பேர், பாலியல் சீண்டலுக்கு ஆளானது 7 பேர், சாதி மற்றும் பாலியல் சீண்டலுக்கு 2 பேர், தாக்குதலுக்கு ஆளானவர்கள் 28 பேர், மிரட்டலுக்கு 28 பேர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் 6 பேர், பாலியல் வன்புணர்வுக்கு முயற்சிக்கப்பட்டவர்கள் 3 பேர், ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்தும், 3 பேர் தற்கொலை செய்தும், 6 பேர் கொலை செய்யப்பட்டும், 3 பேர் இதர வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் ஒரே முறை வன்கொடுமை பாதிப்பிற்கு உள்ளானவர்கள் 63 பேர், பலமுறை பாதிக்கப்பட்டவர்கள் 27 பேர், எப்போதாவது பாதிப்பிற்கு உள்ளானவர்கள் 3 பேர்.
ஒருவரால் பாதிக்கப்பட்டது 56 பேர், ஒருவருக்கு மேற்பட்டவர்களால் பாதிக்கப்பட்டது 28 பேர், ஐந்து, பத்து பேர்களுக்கு மேற்பட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் 6 பேர்.
90 சம்பவங்களிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 82 சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், 8 சம்பவங்களில் கைது இல்லை, 85 பேருக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது, 5 பேருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
இந்த 90 சம்பவங்களில் 3 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழஙகப்பட்டுள்ளது. 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டும், 69 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையிலும், 13 வழக்குகள் காவல்துறை விசாரணையிலும் உள்ளது.

நாங்கள் சந்தித்து பேசிய 90 பேரில் பயத்திலும், மனரீதியான பாதிப்பிலும் 60 பேரும், கோபத்தில் 20 பேரும், மன அழுத்தத்தில் 20 பேரும், நம்பிக்கையற்று 10 பேரும் உள்ளனர்.
எங்கள் ஆய்வு அரசை குறை சொல்வதற்காக அல்ல, இதன் மூலம் சில உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான். இதில் சில சாதகமான வழக்குகளும் உள்ளன.
வன்கொடுமை சட்டத்தில் வன்கொடுமை நடந்த 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், 5 ஆண்டுகளை கடந்தும் வழக்குகள் நீதி மன்றத்துக்கு வராத போக்கும், விசாரிக்கப்பட்டு உரிய நேரத்தில் தீர்ப்புகள் கொடுக்கப்படாத போக்குகள் கவலை அளிக்கிறது.
நான்கு, ஐந்து ஆண்டுகள் கடந்தும் விசாரணை முடியவில்லையென்றால் எங்கோ பிழை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். 98 சவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிகை உரிய காலத்தில் பதிவு செய்யப்படவில்லை.
தற்போது 7500 க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் விசாரணையில் உள்ளன. இவற்றில் 10 சதவிகிதம் மதுரை மாவட்டம் என்பது அதிரச்சி அளிக்கிறது. அரசின் நடவடிக்கைக்கும் நீதிமன்ற விசாரணைக்கும் இடையே இருக்கக் கூடிய இடைவெளியை சரிசெய்வது ஒரு அரசின் கடமை என்பதை பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டுகிறோம்" என்றார் விரிவாக















