மலர்களுக்கு பதில் மாத்திரை; ஆக்சிஜன் மாஸ்க்குடன் வெட்டிங் போட்டோஷூட் நடத்திய ஜோட...
Delhi Blast: நாடு முழுவதும் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி -NIA விசாரணையில் அதிர்ச்சி
டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த 10ம் தேதி மாலை நடந்த கார் குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பை நடத்திய டாக்டர் உமர் மொகமத் காரிலேயே இறந்தார்.
இக்குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட டாக்டர் அடில் மற்றும் முஜாமில் சகீல் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் தொடர்ந்து பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஜெய்ஸ் இ முகமத் தீவிரவாத அமைப்பின் வழிகாட்டுதலில் நடந்த இத்தாக்குதலை தொடர்ந்து அடுத்த கட்டமாக நாடு முழுவதும் நான்கு நகரங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 6 இடங்களிலும், நாட்டின் இதர பகுதியில் நான்கு நகரத்திலும் இத்தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தனர். இதற்காக நான்கு கார்களை வாங்கி இருந்தனர். அந்த காரில் வெடிகுண்டுகளை எடுத்து சென்று வெடிக்க செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
அதோடு ஒவ்வொரு தாக்குதலுக்கும் தலா இரண்டு பேர் வீதம் 8 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள். அவர்கள் அனைவரும் பரிதாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் தாக்குதல்களை நடத்துவதற்காக கார்களில் தேவையான மாற்றங்களை செய்ய ஆரம்பித்து இருந்தார்கள். அந்த நான்கு கார்களும் பல முறை விற்பனை செய்யப்பட்ட பழைய கார்கள் ஆகும்.

அவற்றை தேசிய புலனாய்வு விசாரணை ஏஜென்சி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட DL10 CK 0458 என்ற காரில் பின் சீட்டில் அடையாளம் தெரியாத ஒருவர் உறங்கிக்கொண்டிருந்தார். அந்த நபரையும் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மற்றொரு கார் வெடிகுண்டுடன் திங்கள் கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக திரட்டப்பட்ட நிதியில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்களையும் வாங்கி இருந்திருக்கின்றனர்.
குருகிராம், நுஹ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இருந்து 20 குவிண்டால்களுக்கு மேல் NPK உரத்தை விலைக்கு வாங்கி இருந்திருக்கின்றனர்.
NPK உரம் என்பது நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), மற்றும் பொட்டாசியம் (K) ஆகியவற்றின் கலவையாகும். இந்த மூலப்பொருள் IED- வெடிகுண்டுகள் தயாரிக்க வாங்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


















