`திருமணத்துக்கு பெண் பார்த்து கொடுங்க, மறக்கவே மாட்டேன்’ - சரத் பவாருக்கு கிராம ...
9% அதிகரித்த வாக்குப்பதிவு; `பீகார் தேர்தல் பேட்டர்ன்’ மீண்டும் பலிக்குமா? வரலாறு சொல்வது என்ன?
பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
இதுவரை வெளியாகி உள்ள தேர்தலுக்கு பின்னான கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 150 - 170 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சில நிறுவனங்கள் கணித்துள்ளன. இதனால், இப்போதே பாஜக கூட்டணி குஷியாக உள்ளது.

ஆனால், அவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.
பீகாரில் கடந்த 6-ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. 11-ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.76 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தமாக, இப்போது நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. இது பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை ஆகும்.
2020-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 57.29 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. 2020-ம் ஆண்டு தேர்தலை விட, இந்த ஆண்டு வாக்கு பதிவின் எண்ணிக்கை 9.62 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதைத் தான் பாஜக கூட்டணி கவனிக்க வேண்டும்.
முந்தைய தேர்தலை விட, 5 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவு நடக்கும்போது, இதுவரை பீகாரில் மூன்று முறை ஆட்சி மாற்றம் நடந்துள்ளது.
அதாவது 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில், 1962-ம் ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவாகி இருந்துள்ளது. அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
1980-ம் ஆண்டு நடந்த பீகார் தேர்தலில், 1977-ம் ஆண்டை விட, 6.8 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவாகி உள்ளன. அப்போது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. ஜனதா தளம் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

பின்னர், 1990-ம் ஆண்டு தேர்தலில் 1985-ம் ஆண்டு தேர்தலை விட, 5.7 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவாகி உள்ளது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, ஜனதா தளம் ஆட்சி அமைத்துள்ளது.
இதனால், நாளை தேர்தல் முடிவுகள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்ற பேச்சுகள் அரசியல் மட்டத்தில் கொடிக்கட்டி பறக்கிறது.















