மீண்டும் பவுனுக்கு ரூ.91,000-த்தை தாண்டிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம...
Doctor Vikatan: ``குழந்தையின் அப்பா யார்?'' - DNA டெஸ்ட் உறுதிசெய்யுமா? எப்படி செய்யப்படுகிறது?
Doctor Vikatan: திருமணம் தாண்டிய உறவுகளிலும், திருமணமாகியிருந்த நிலையிலும்கூட, இருவருக்குப் பிறக்கும் குழந்தையை தனதல்ல என அந்த ஆண் மறுக்கும் சம்பவங்களை அடிக்கடி பார்க்கிறோம். அப்போதெல்லாம் டிஎன்ஏ டெஸ்ட் பற்றியும் பேசுகிறார்கள். அதென்ன டிஎன்ஏ டெஸ்ட்... அது எப்படிச் செய்யப்படுகிறது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

டிஎன்ஏ டெஸ்ட்டிங் அல்லது பெட்டர்னிட்டி டெஸ்ட்டிங் என்பது அறிவியல்ரீதியான ஒரு பரிசோதனை முறை. இந்தப் பரிசோதனையின் மூலம் ஓர் ஆண், அவருக்குப் பிறந்ததாகச் சொல்லப்படுகிற குழந்தைக்கு மரபியல் ரீதியான தந்தை என்பதை உறுதி செய்யலாம்.
டிஎன்ஏ பரிசோதனையில், குழந்தையின் டிஎன்ஏவை, அப்பாவின் டிஎன்ஏ உடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். சில நேரங்களில், தேவைக்கேற்ப அம்மாவின் டிஎன்ஏ உடனும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். டிஎன்ஏ பரிசோதனையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், டிஎன்ஏ என்பது என்ன என்ற தெளிவு பெற வேண்டியது அவசியமாகிறது.
டிஎன்ஏ என்பது மரபணு வரைபடம் (ப்ளூப்ரின்ட்) போன்றது. அது நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது. பிறக்கும் குழந்தையானது தாயிடமிருந்து 50 சதவிகித டிஎன்ஏவையும் தந்தையிடமிருந்து 50 சதவிகித டிஎன்ஏவையும் கொண்டிருக்கும்.
அந்த அடிப்படையில், டிஎன்ஏவில் குறிப்பிட்ட சில விஷயங்களை குழந்தை மற்றும் தந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்து, அந்த ஆண்தான், குழந்தைக்கு மரபியல்ரீதியான தந்தையா என்பது உறுதிசெய்யப்படும்.

பக்கல் ஸ்வாப்" (Buccal Swab) எனப்படும் கன்னங்களின் உள்பகுதியிலிருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படும். சில நேரங்களில் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்படும். ஆனால், Buccal Swab என்பது வலியற்ற, எளிய முறை என்பதால் பெரும்பாலும் அதுவே மேற்கொள்ளப்படும்.
குழந்தை மற்றும் தந்தையிடமிருந்து இப்படி மாதிரிகள் பெறப்படும். பரிசோதனையின் துல்லியத்தை உறுதிசெய்ய, சில நேரங்களில் அம்மாவிடமிருந்தும் மாதிரி பெறப்பட்டு பரிசோதிக்கப்படும்.
குரோமோசோமில் ஒரு குறிப்பிட்ட மரபணு (Gene) அல்லது மரபியல் குறிப்பான் (Genetic Marker) அமைந்துள்ள துல்லியமான இடம் அல்லது நிலையை லோக்கஸ் என்கிறோம். இது குழந்தைக்கும் தந்தைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.
டிஎன்ஏ முழுவதும் மேட்ச் ஆகிவிட்டால், அந்த ஆண்தான் குழந்தையின் தந்தை என்பது உறுதியாகும். மேட்ச் ஆகாத பட்சத்தில், அவர் அந்தக் குழந்தையின் தந்தையில்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.

சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு இதுபோன்ற டெஸ்ட் அவசியமாகிறது. சட்டத்துக்குப் புறம்பான உறவுகள், அதன் காரணமாகப் பிறந்த குழந்தைக்கு தந்தை யார் என்பதில் எழுந்த சிக்கல் போன்றவற்றைக் கண்டறியவே இந்த டெஸ்ட் வலியுறுத்தப்படும்.
கோர்ட் ஆர்டர் இருந்தால் மட்டுமே இந்த டெஸ்ட் செய்யப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த டெஸ்ட் சட்டப்படி மதிப்புக்குரியது. அரசு அங்கீகரித்த பரிசோதனைக்கூடத்தில் மட்டுமே இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.
தனியார் பரிசோதனைக்கூடங்களில் செய்யப்படுகிற டெஸ்ட், சட்டரீதியான விஷயங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.













