சிவகாசி: `வீட்டு வரி ரசீதுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம்' -கவுன்சில...
Doctor Vikatan: ஜலதோஷம், உடல் வெப்பம் இரண்டையும் சமநிலைப்படுத்த சித்த மருத்துவம் உதவுமா?
Doctor Vikatan: என் மகனுக்கு 25 வயதாகிறது. அவனுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்கிறது. அதனால் எப்போதும் வெந்நீர், சிக்கன் சூப் என சூடான உணவுகளையே கொடுக்கிறேன். இன்னொரு பக்கம் உடலில் சூடு அதிகமாகி, கட்டிகள் வருகின்றன. அதற்கு குளிர்ச்சியாக ஏதேனும் கொடுத்தால், மறுபடி சளி பிடித்துக்கொள்கிறது. இந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது? அவனுக்கு சித்த மருத்துவம் உதவுமா?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்
அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக சந்தேகப்படலாம். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடிய உணவுகளை எடுக்க வேண்டியது முக்கியம்.
வெந்நீர் குடிப்பதால் உடல் சூடு அதிகரிக்க வாய்ப்பில்லை. வெந்நீர் குடிக்கும்போது, உடலின் வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்கும். குடல் இயக்கம் சீராகும், மலச்சிக்கல் சரியாகும். சளி பிடித்திருக்கும் போது வெந்நீர் குடிப்பது தான் நல்லது.
இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவும் போது சிக்கன் சூப் கொடுக்கலாம். ஒருவேளை உடலில் கொப்புளங்கள் வந்தாலோ, உடல் சூடாவதாக உணர்ந்தாலோ, இரண்டு நாள்களுக்கொரு முறை மட்டும் குடிக்கலாம். தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பித்தம் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வதைக் கொண்டு, கொப்புளங்கள் வந்திருக்கலாம் அல்லது நாக்கில் புண் ஏற்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. இவை அனைத்தும் அதிக காரமான உணவுகளை உண்ணும் போதுதான் ஏற்படும்.

சளிப் பிரச்னையை சரிப்படுத்திக்கொள்ள வீட்டில் உள்ள மருந்துகளைப் பயன்படுத்தலாம். தொண்டை கரகரப்பாக இருந்தால், வெறும் உப்பைப் போட்டு வாய் கொப்பளித்தாலே தொண்டை கம்மல் (குரல் கம்மல்) குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த சீசனில் நீங்கள் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கியமான மருந்துகள் உள்ளன. தாளிசாதிச் சூரணத்தை அரை டீஸ்பூன் எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
அடுத்து அதிமதுரச் சூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இதை மாத்திரைகளாகவே வாங்கி, சப்பி சாப்பிட்டாலும் சளி குறையும். இது கோழையை (கபத்தை) வெளியேற்றும் 'எக்ஸ்பெக்டோரன்ட்' (கோழை அகற்றும் செய்கை) குணத்தைக் கொண்டது.
நெஞ்சில் கட்டியிருக்கும் கபத்தை வெளியேற்ற உதவும். ஆடாதோடை மணப்பாகு என்பது இது வீட்டில் இருக்க வேண்டிய மிக முக்கியமான மருந்து. இதை 10 மில்லி அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்துக்கொள்ளலாம்.
இந்த மூன்று மருந்துகளும் ஓரளவுக்கு வெப்பம் மிகுந்த மருந்துகள்தான். ஆனால், சளிப் பிரச்னை இருக்கும்போது ஐந்து முதல் ஏழு நாள்கள் பயன்படுத்தினால் எந்தச் சிக்கலும் இருக்காது.
உங்கள் மகனின் உடல்நலம் ஓரளவு சரியான பிறகு, ஒரு சித்த மருத்துவரை அணுகி நாடி பார்த்து, அவரது உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். மேலும், அவருக்கு டான்சில்ஸ் தொந்தரவு இருக்கிறதா அல்லது சைனஸ் போன்ற பிரச்னை இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படைக் காரணத்தை அறிந்து, அதற்கேற்ற நல்ல சித்த மருந்துகளையும் உணவு முறைகளையும் கொடுத்தால், கண்டிப்பான மாற்றத்தைக் காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளை மட்டும் கொடுங்கள்.
முடிந்த அளவுக்கு வீட்டு உணவுகளையே எடுத்துக்கொண்டு, மூன்று வேளையும் இயற்கையோடு இயைந்த உணவுமுறையைப் பின்பற்றினால் மிகவும் நல்லது.
பாலில் மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்துக் கொடுக்கும் கோல்டன் மில்க் (Golden Milk) முறையையும் தொடர்ந்து கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், சளி இல்லாத நேரங்களில், நெல்லிக்காய் லேகியத்தை அரை டீஸ்பூன் சப்பிச் சாப்பிட்டு, வெந்நீர் குடிக்கச் சொன்னால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
















