மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ...
மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?
மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும்.
மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், புறநகர் ரயிலில் இருந்து 5 பேர் கீழே விழுந்து இறந்தது தொடர்பாக மத்திய ரயில்வே பொறியாளர்கள் இருவர்மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்களை இயக்கும் மோட்டார்மேன்களின் அறைக்கு வெளியே ரயில்வே ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மோட்டார்மேன்கள் வெளியில் செல்ல முடியவில்லை. வழக்கமாக மாலை நேரத்தில் ரயில் நிலையத்தில் கூட்டம் கடுமையாக இருக்கும்.
அப்படிப்பட்ட நேரத்தில் ரயில்வே ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், ஒட்டுமொத்த ரயில் சேவையும் ஸ்தம்பித்தது. சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மஜித் பந்தர், டாக்யார்ட் ரோடு ரயில் நிலையங்களில் ரயில்கள் ஆங்காங்கே நின்றதால், பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் ரயில்வே போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
மத்திய ரயில்வே உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மண்டல ரயில்வே மேலாளர் ஹிதேஷ் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தால் நிலைமை மோசமடைந்து வருவதை சுட்டிக்காட்டி, போராட்டத்தை கைவிடும்படி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மாலை 6.40 மணிக்கு ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

போராட்டத்தால் பாதிக்கப்பட்ட விஜிதா நிதேஷ் என்ற பயணி இதுகுறித்து கூறுகையில், “எந்த வித அறிவிப்பும் இல்லை. ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்தால், அவர்களது அலுவலகத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தலாம். இந்த அளவுக்கு பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் - இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?” என்று கேள்வி எழுப்பினார்.
ரயில் போக்குவரத்து நின்றதால், சாண்டர்ஸ்ட் ரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு புறநகர் ரயில் பயணிகள் மீது மோதியது.
இதில் சூர்யகாந்த் மற்றும் ஹெய்லே என்ற இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். தானே ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் கடுமையாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததால், தானேயிலிருந்து கர்ஜ் நோக்கி ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.





















