செய்திகள் :

ரூ.41,000 கோடியை மோசடி செய்தாரா அனில் அம்பானி? என்ன தான் நடந்தது இவரது சாம்ராஜ்ஜியத்தில்?|InDepth

post image

அனில் அம்பானி

சில ஆண்டுகளாக அதிகம் கேட்கப்படாத... உச்சரிக்கப்படாத பெயர், தற்போது மீண்டும் தலைப்பு செய்தி ஆகியுள்ளது.

பாகப்பிரிவினை

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் ஆணிவேரான திருபாய் அம்பானியின் மகன்கள் ஆசியாவின் தற்போதைய டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி.

2002-ம் ஆண்டு திருபாய் அம்பானியின் இறப்பிற்கு பிறகு, 2005-ம் ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே பாகப்பிரிவினை செய்து வைக்கப்பட்டது.

இந்தப் பாகப்பிரிவினையில் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு மற்றும் ரிலையன்ஸ் கட்டமைப்பு அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டது.

எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள் முகேஷ் அம்பானிக்கு கொடுக்கப்பட்டது.

அனில் அம்பானி
அனில் அம்பானி

அனில் அம்பானி - பயணமும், சாதனைகளும்

ரிலையன்ஸ் குழுமத்தை நடத்த தொடங்கிய அனில் அம்பானி, குறுகிய காலகட்டத்திலேயே பல பல உச்சங்களை தொட தொடங்கினார்.

2004-ம் ஆண்டு, அனில் அம்பானியின் தலைமையின் கீழ், ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அது தான் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் அப்போதைய சூப்பர் ஸ்டார்.

கால் பதித்த இடங்களில் எல்லாம் அவருக்கு வெற்றி தான்... 2008-ம் ஆண்டு, அனில் அம்பானி வெளியிட்ட ரிலையன்ஸ் பவரின் ஐ.பி.ஓக்கள் வெறும் அறுபதே நொடிகளில் விற்று தீர்ந்தன. இது இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை வெற்றி ஆகும்.

அதே ஆண்டு, அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலராக அசுர வளர்ச்சி அடைய, உலகின் ஆறாவது பணக்காரர் என்கிற பெருமையையும் பெற்றார்.

ரிலையன்ஸ் தொழிற்சாலைகளுக்கு வெளிநாட்டில் இருந்து 2 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதன் மூலம், வெளிநாட்டு சந்தை கதவுகளை இந்தியாவிற்கு திறந்து வைத்ததில் அனில் அம்பானிக்கு முக்கிய பங்கு உண்டு.

சறுக்கல் தொடங்கியது எங்கே?

அடுத்தடுத்து உயர்வை சந்தித்து வந்த அனில் அம்பானியின் சரிவு, 2008-ம் ஆண்டு முதன் முதலாக தொடங்கியது. அதுவும் தன் அண்ணனான முகேஷ் அம்பானியாலே தொடங்கியது.

இதற்கு முன்பும், சில பிரச்னைகளையும், சிக்கல்களையும் அனில் அம்பானி சந்தித்து இருந்தாலும், இது தான் அவர் சந்தித்த முதல் மிகப்பெரிய பிரச்னை.

ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனத்தின் தனக்கான பங்குகளை கோரினார் முகேஷ் அம்பானி. இதனால், அனில் அம்பானி தென் ஆப்பிரிக்காவின் எம்.டி.என் நிறுவனத்துடன் தன்னுடைய ரிலையன்ஸ் தொடர்பு நிறுவனம் போடவிருந்த இணைப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

அடுத்ததாக, 2009-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை, ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் இயற்கை வளம் இடையிலான எரிவாயு சப்ளை குறித்து முகேஷ் மற்றும் அனில் அம்பானிக்கு இடையே வழக்கு நடந்தது. அதில் முகேஷ் அம்பானிக்கு சாதகமாகவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது.

கடன்
கடன்

தலைமை பொறுப்பு ஏற்ற சில ஆண்டுகளிலேயே உலகின் டாப் பணக்காரர் என்கிற பெயரை பெற்ற அனில் அம்பானி, இதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக சரிவுகளை சந்திக்க தொடங்கினார்.

2013-ம் ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே 200 மில்லியன் மதிப்பிலான தொலைதொடர்பு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இதனால், அண்ணன், தம்பி இடையே இருந்த மனகசப்பு சரியாகிவிட்டது என்று பரவலாக நினைக்கப்பட்டது.

இருந்தும், இந்த ஒப்பந்தம் ஒன்றும் இருவருக்கும் இடையே அவ்வளவாக உறவை ஏற்படுத்தி விடவில்லை.

2014-ம் ஆண்டு, அனில் அம்பானியின் பவர் மற்று கட்டமைப்பு நிறுவனம் கடன் பிரச்னையை சந்திக்க தொடங்கியது. இதை கடன் பிரச்னை என்று கூறுவதை விட, கடன் சுமை என்று கூறுவது தான் சரியானது.

கடன்... திவால்...

அடுத்த அ(இ)டி விழுந்தது ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் ரிலையன்ஸ் கடல் பொறியியல் நிறுவனத்திற்கு. இந்த இரண்டு நிறுவனங்களும் 2015 - 2017 காலகட்டங்களில் திவால் நடவடிக்கைகளை சந்தித்தன.

2017-ம் ஆண்டு, நிறுவனங்களை லாப பாதைக்கு கொண்டு செல்ல, ரிலையன்ஸ் தொடர்பு நிறுவனம் டேனா வங்கியிடம் இருந்து ரூ.250 கோடி கடன் வாங்கியது. ஆனால், இந்தக் கடன் பல ஆண்டுகளுக்கு அடைக்கப்படாமலேயே இருந்தது.

2018-ம் ஆண்டு, கடன் சுமை தாங்காமல், அதைக் கொஞ்சமாவது குறைக்கலாம் என்று முடிவெடுத்தார் அனில் அம்பானி. அதையடுத்து, ரிலையன்ஸ் தொடர்பு நிறுவனத்தின் ரூ.25,000 கோடி தொலைதொடர்பு சொத்துகளை விற்க முடிவு செய்தார்.

இந்தச் சொத்துகளை அவரது அண்ணனான முகேஷ் அம்பானியே வாங்கினார்.

அனில் அம்பானி
அனில் அம்பானி

2019-ம் ஆண்டு, வாங்கிய கடன்களைத் திருப்பி செலுத்தாததால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்தித்தார் அனில் அம்பானி. அப்போது அவரை கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் கூட இருந்தது.

2020-ம் ஆண்டு அனில் அம்பானி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கு கொடுத்த பெர்சனல் கேரண்டியை அடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான திவாலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

2021-ம் ஆண்டு, ரிலையன்ஸ் கேபிட்டலுக்கு எதிராக திவால் நடவடிக்கையை தொடங்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

செபியின் தடை

2022-ம் ஆண்டு, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் பிற நிர்வாகிகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்தவொரு நிறுவனங்களுடன் இணையவும், அதன் இயக்குநர்களாக செயல்படவும் இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து, அனில் அம்பானி ரிலையன்ஸ் கட்டமைப்பு மற்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவனங்களில் இருந்து இயக்குநர் பதவிகளில் இருந்து விலகினார்.

2024-ம் ஆண்டு, ரிலையன்ஸ் வீட்டு நிதி நிறுவனத்தின் நிதிகளை வேறு நிறுவனங்களில் பயன்படுத்தியதால், அனில் அம்பானி மற்றும் அவரது 24 நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகால தடை விதித்தது செபி.

மேலும், அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தத் தடையினால், 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு, பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிடவும், வாங்கவும் அனில் அம்பானியால் முடியாது.

செபி
செபி

ஏன் இந்த சரிவு?

ஒரு காலத்தில் உலகின் ஆறாவது பணக்காரர் என்கிற இடத்தையும், ஐ.பி.ஓ வெளியிட்ட 60 நொடிகளில் மொத்தமும் விற்பனை என்கிற சாதனையையும் பெற்ற அனில் அம்பானியின் சரிவிற்கான காரணங்கள்...

அனில் அம்பானி தனது சாம்ராஜ்ஜியத்தை தொடர் கடன்களினால் தான் கட்டமைத்து வந்தார். இதனால், அவருக்கு வந்த லாபங்களும், கொட்டிய பணமும் இந்தக் கடனையும் அடைக்கவும், அதற்கான வட்டியை கொடுக்கவுமே சரியாக இருந்தது.

அடுத்ததாக, எந்தவொரு அனுபவமும் இல்லாமல் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் கால் பதித்து வந்தார். உலகின் உள்ள பல பணக்கார சாம்ராஜ்ஜியங்கள் ஒரு சில துறைகளின் மீது தான் கட்டப்பட்டிருக்கும். அதில் அவர்களுக்கு நல்ல அனுபவமும் இருக்கும். ஆனால், இதற்கு நேர் மாறாக நடந்துகொண்டார் அனில் அம்பானி.

அனில் அம்பானி புதிது புதிதாக கொண்டு வந்த திட்டங்களுக்கு தாமதமாக கிடைத்த ஒப்புதல்கள், சந்தித்த வழக்குகள் போன்றவைகளால் அவருக்கு வருமானம் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வருமானம் வரவில்லை என்றாலும், அவர் ஆரம்பித்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த, செயல்பாட்டில் வைத்திருக்க காசு செலவளித்து தானே ஆக வேண்டும்.

ஒரு காலத்தில் தொலைதொடர்புகளில் சூப்பர் ஸ்டாராக இருந்த ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் இல்லாமல் தள்ளாட தொடங்கின.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் சரியான நிதி மேலாண்மை இல்லை.

தொடர்ந்து சட்ட சிக்கல்களையும், வழக்குகளையும் சந்தித்துக்கொண்டே வந்தார் அனில் அம்பானி.

அனில் அம்பானி
அனில் அம்பானி

மீண்டும் ஏன் எழவில்லை?

பிசினஸ்மேன் சரிவதும், எழுவதும் வெகு இயல்பான ஒன்று தான். ஆனால், அனில் அம்பானியால் மீண்டும் எழ முடியாததற்கு மேலே கூறியவை தான் காரணங்கள்.

கடன், அவர் மீதுள்ள நம்பிக்கையற்ற தன்மை, வழக்குகள் போன்றவை அவரை மீண்டும் எழவிடவில்லை.

அவர் பிசினஸ்களில் கலக்கி கொண்டிருந்த காலத்தில் சக போட்டியாளர்களாக இருந்தவர்கள், இப்போதே பெரிய பெரிய உச்சங்களைத் தொட்டுவிட்டனர்.

இப்போது அவரால் அவர்களுடன் கட்டாயம் போட்டி போட முடியாது.

இப்போது என்ன பிரச்னை?

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இவருக்கு அவருடைய ஒவ்வொரு நிறுவனங்களில் இருந்து பிரச்னை வந்திருக்கிறது. இப்போது வந்திருப்பதோ, அவருடைய 'ராகாஸ்' நிறுவனத்தால்.

இந்த நிறுவனத்திற்காக, இவருக்கு யெஸ் வங்கி ரூ.3,000 கோடி முன்பு கடன் கொடுத்திருக்கிறது.

ஆனால், அந்தப் பணத்தை அனில் அம்பானி சட்டத்திற்கு புறம்பாக அவருடைய பிற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளார். மேலும், வெளிநாடுகளிலும் முதலீடு செய்துள்ளார்.

Cobrapost என்னும் விசாரணை இணையதளம், 2006-ம் ஆண்டில் இருந்து அனில் அம்பானி கிட்டத்தட்ட ரூ.41,000 கோடி நிதிகளை சட்டத்திற்கு புறம்பாக தன்னுடைய பிற நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மாற்றியுள்ளார் என்கிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது ரிலையன்ஸ் குழுமம்.

இது குறித்த விசாரணையின் போது, அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளதாக சி.பி.ஐ இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

அனில் அம்பானி
அனில் அம்பானி

இதையடுத்து, அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. பின்னர், அனில் அம்பானி அமலாக்கத்துறையில் நேரில் ஆஜராகியும் விளக்கமளித்தார்.

சமீபத்தில், இவருடைய உதவியாளர் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகளையும் முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.

இன்னும் தீவிர விசாரணைகளை நடத்தி வருகிறது சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.!

தொடர்ந்து சொத்துகளைப் பெருக்கும் இந்தியாவின் 1% பணக்காரர்கள்! - G20 அறிக்கை கூறுவது என்ன?

சமீபத்தில் ஜி20 அமைப்பு உலக பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் இதோ... > 2000-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து புத... மேலும் பார்க்க

Commodity Trading-ல் லாபம் பார்ப்பது எப்படி | MCX Future-ல வெள்ளியை வித்துட்டும் வாங்கலாமா - Part 2

இந்த வீடியோவில் எப்படி கமாடிட்டியில் வர்த்தகம் செய்வது, வெள்ளியில் future contract-எப்படி எடுப்பது, margin money எவ்வளவு தேவை, Silver ETF-ல் முதலீடு செய்யலாமா என்பதையெல்லாம் இந்த வீடியோவில் பேசியிருக்... மேலும் பார்க்க

55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தை வாங்கி குவிக்கும் மத்திய வங்கிகள்! - இந்தியாவின் நிலை என்ன?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

StartUp சாகசம் 45: `காற்றுமாசை குறைக்க உதவும் `AERSAFE’ தொழில்நுட்பம்’ - இது KARDLE Industries கதை

KARDLE IndustriesStartUp சாகசம் 45காற்று மாசுபாடு என்பது மனிதர்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு உலகளாவிய நெருக்கடியாகும். காற்றில் PM2.5 மற்றும் PM10 போன்ற... மேலும் பார்க்க

Tata: நீட்டிக்கப்படாத மெஹ்லி மிஸ்திரியின் பதவிக்காலம்; டாடா அறக்கட்டளையில் புது பிரச்னை

டாடா அறக்கட்டளையில் தற்போது பிரச்னை ஒன்று பெரிதாக வெடித்துள்ளது. டாடா அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராக மெஹ்லி மிஸ்திரி இருந்து வந்தார். அவருடைய பதவி இன்றுடன் முடிவடைகிறது. இவரது பதவி நீட்டிக்கப்... மேலும் பார்க்க