Personal Finance: முதலீட்டின் மூலம் ஒரு கோடி ரூபாய் சேர்க்கணுமா? 15:15:15 ஃபார்ம...
Doctor Vikatan: கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம்; கவலைக்குரியதா, தானாகச் சரியாகுமா?
Doctor Vikatan: வயதான என் அம்மாவுக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தம் நார்மலாகவே இருக்கிறது. இந்த வீக்கத்துக்கு வேறு என்ன காரணமாக இருக்கும். தானாகச் சரியாகிவிடும் என விடலாமா, சிகிச்சை எடுக்க வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.
வயதானவர்களுக்கு கால்களில் ஏற்படும் திடீர் வீக்கத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கால்களில் ஏற்படும் வீக்கம் இரண்டு வகையாகப் பார்க்கப்படும். ஒன்று வலியோடு கூடிய வீக்கம், இன்னொன்று வலியில்லாத வீக்கம்.
திடீரென அடிபடுதல், காயம் ஏற்படுதல், தசை நார் கிழிதல் போன்ற காரணங்களால் ஏற்படும் வீக்கத்தில் வலியும் இருக்கும். இதுபோன்ற வலி மற்றும் வீக்கத்துக்கு உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.
அதிலும், வயதானவர்களுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்பு உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். லேசாக கால் பிரண்டால்கூட சவ்வு கிழியலாம். எலும்புகளில் லேசான விரிசல்கூட ஏற்படலாம். உடனடியாக சிகிச்சை கொடுக்கப்படாத பட்சத்தில், அது பெரிய பிரச்னையாக மாறக்கூடும்.
அடுத்தது வலியில்லாத வீக்கம். இதிலும் இரண்டு வகை உண்டு. ரத்தக் குழாய்களில் உள்ள வால்வுகள் பலவீனமாவதால், அந்த இடத்தில் ரத்தம் தேங்கிவிடும்.
ரத்தமானது பம்ப் செய்யப்பட்டு, கால்களிலிருந்து இதயத்துக்கு வர வேண்டும். அந்த வால்வு பலவீனமாகியிருந்தால், அசுத்தமான ரத்தமும் நீரும் கால்களில் கோத்துக்கொள்ளும். இந்தப் பிரச்னை பல நாள்களாகத் தொடர்ந்தால், சருமம் பாதிக்கப்படலாம்.
அந்தப் பகுதி கருமையாக மாறலாம். அந்த இடத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். நாள்கள் செல்லச் செல்ல வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இதற்கும் சிகிச்சை மிக அவசியம்.
வலியில்லாத வீக்கத்துக்கு இன்னொரு காரணம், இதயம் அல்லது சிறுநீரகங்களில் ஏற்பட்ட பாதிப்பாகவும் இருக்கலாம். ஏற்கெனவே, இதய பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு இதயநலனை பரிசோதித்துப் பார்க்க வேண்டியது மிக அவசியம்.
அதேபோல சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் இப்படி வலியில்லாத வீக்கம் ஏற்படலாம். சிறுநீரக பாதிப்பின் காரணமாக நீரை வெளியேற்ற முடியாமல், கால்களில் வீக்கமாக வெளிப்படலாம். இந்த வீக்கமானது கால்களில்தான் வர வேண்டும் என்றில்லை, வயிற்றைச் சுற்றியோ, கண்களைச் சுற்றியோகூட வரலாம். இதுவும் தாமதமின்றி உடனடியாக சிகிச்சை கொடுக்கப்பட வேண்டியது.
எனவே, கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்து அதற்கான சிகிச்சை வேறுபடும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.













