ஹரியானா: "5,21,619 போலி வாக்காளர்கள்; ஒரு நபர் 100 வாக்கு செலுத்தியிருக்கிறார்" ...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சம்பவ நாளில் பணியிலிருந்த 12 போலீஸார் CBI விசாரணைக்கு ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கரூர் சுற்றுலா மாளிகையில் தற்காலிக முகாமை அமைத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்டமாக, சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்.ஐ.டி. (SIT) குழுவிடமிருந்து ஆவணங்களை பெற்ற சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. பிரவீன் குமார், கடந்த மாதம் 18-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கரூர் சி.ஜே.எம்.-1 நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, 41 பேர் பலியான சம்பவ இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில், 3D டிஜிட்டல் ஸ்கேனர் உதவியுடன் அளவீட்டு பணியை இரண்டு நாள்கள் தொடர்ந்து மேற்கொண்டனர்.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். இதுவரை 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்காலிக சி.பி.ஐ. முகாமில் நேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு, த.வெ.க. கூட்டத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக காவல்துறையின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் ஆஜராகியுள்ளனர்.
அதாவது, சம்பவம் நடைபெற்ற அன்று பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 12 பேர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார்கள்.
அதோடு, அடுத்த சில நாட்களில், உயிர்பலி ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு சி.பி.ஐ தரப்பில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.















