Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்க...
`கலைஞரின் குட் புக்; இருவருக்கும் பிடிக்கவில்லை' - மு.பெ.சாமிநாதனின் பொறுப்பு; பின்னணி என்ன?
திருப்பூர் மாவட்ட தி.மு.க.-வில் அக்கட்சித் தலைமை அதிரடியாக மாற்றத்தை செய்திருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி, திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரான இல.பத்மநாபனை அங்கிருந்து மாற்றப்பட்டு, கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினரும், மடத்துக்குளம் திமுக ஒன்றியச் செயலாளருமான கே.ஈஸ்வரசாமி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த அமைச்சரான மு.பெ.சாமிநாதன் 1996-இல் தொடங்கி 2011 வரை தொடர்ந்து மூன்று முறை வெள்ளக்கோவில் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற மு.பெ.சாமிநாதன் முதன்முதலாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மடத்துக்குளம் மற்றும் திருப்பூர் வடக்கு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.

திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக நியமிகப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு மு.பெ.சாமிநாதனிடம் வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் மு.பெ.சாமிநாதன். இதைத் தொடர்ந்து, கடந்த 2021 காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மு.பெ.சாமிநாதன். ஏற்கெனவே, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த தனக்கு பெரிய துறை ஒதுக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், அவருக்கு செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பலமுறை அமைச்சரவை மாற்றத்தின்போதும், தனக்கு வேறு துறை ஒதுக்கப்படும் எனக் காத்திருந்த மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ்வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது. கட்சியிலும் பெயரளவுக்கு உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு மு.பெ.சாமிநாதனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்சி அமைப்புரீதியிலான மாற்றத்தின்போது, காங்கேயம், தாராபுரம் தொகுதிகள் அடங்கிய திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டார். அவரது தீவிர ஆதரவாளரான இல.பத்மநாபன் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகள் அடங்கிய திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். கொங்கு மண்டலத்தில் கட்சியின் சீனியரான தனக்கு பெரிய துறை ஒதுக்கவில்லை. கட்சியிலும் கெளரவமான பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற வருத்தம் மு.பெ.சாமிநாதனுக்கு இருந்து வந்தது. சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் கட்சியை விட்டு விலகியதால், அவர் வகித்த வந்த துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு, கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டி இருந்தது. இதன் அடிப்படையிலேயே மு.பெ.சாமிநாதனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட திமுகவினர் பேசுகையில்,"கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, மு.பெ.சாமிநாதனுக்காகவே திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார். அந்த அளவுக்கு கருணாநிதிக்கு நம்பிக்கைக்குரியவராக மு.பெ.சாமிநாதன் விளங்கினார். அதைத் தொடர்ந்து. 2021 தேர்தலில் வெற்றி பெற்றபோது தனக்கு வலுவான துறை கிடைக்கும் என்று தான் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால், இவரது மென்மையான அரசியல் அணுகுமுறை துணை முதல்வர் உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. ஏற்கெனவே, கொங்கு மண்டலத்தில் வலுவாக உள்ள அதிமுகவை எதிர்த்து இவரால் அரசியல் செய்ய முடியுமா? என்ற சந்தேகமும் இருந்ததால், மு.பெ.சாமிநாதனுக்கு அவர்கள் இருவரும் முக்கியத்துவம் தரவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. கோவை மாவட்டத்தில் திமுகவினர் ஒருவர் கூட 2021 தேர்தலில் வெற்றி பெறாத நிலையில், கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக தனக்கு ஒதுக்கப்படும் என நினைத்திருந்தார் மு.பெ.சாமிநாதன். ஆனால், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த அமைச்சர் சக்ரபாணியையும், அதைத் தொடர்ந்து, கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜியையும் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டனர். செந்தில்பாலாஜி கைதாகி சிறை சென்றபோதும்கூட மு.பெ.சாமிநாதனுக்கு அந்த பொறுப்பை வழங்காமல் ஈரோட்டைச் சேர்ந்த முத்துசாமி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இருந்தாலும், அவரை சமாதானப்படுத்த நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக மு.பெ.சாமிநாதனின் ஆதரவாளரான இல.பத்மநாபனை நியமித்ததற்கு உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதி நிர்வாகிகள் தொடக்கத்தில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அண்மையில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஒன் டு ஒன்-இல் முக்கிய நிர்வாகிகள் பலரும் இல.பத்மநாபனை மாற்றி ஆக வேண்டும் என்று தங்களது அதிருப்தியை கடிதமாகக் கொடுத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் நிலவும் அதிருப்தியை களைய இல.பத்மநாபனை மாற்றி ஆக வேண்டும் என்ற முடிவுக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். ஆனால், இல.பத்மநாபனை மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்த மு.பெ.சாமிநாதன், தனக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பும், தன்னிடம் உள்ள கிழக்கு மாவட்டத்துக்கு இல.பத்மநாபனை மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டும். உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் அடங்கிய திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் சக்ரபாணி கை காட்டுபவருக்கு கொடுத்துவிடலாம். அதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று முதல்வரிடம் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். கொங்கு வேளாளர் சமுதாயத்தில் காலியாக உள்ள துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு தான் பெற்றுவிடலாம் என்ற கணக்கில் அமைச்சர் சக்ரபாணி காய்களை நகர்த்தி வந்தார். ஆனால், மு.பெ.சாமிநாதன் தனக்குத்தான் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று ஒரே பிடியாக நின்றுவிட்டதால், அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பை கட்சித் தலைமை வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஈரோட்டைச் சேர்ந்த அமைச்சர் முத்துசாமி, செந்தில்பாலாஜி உள்ளிட்ட கொங்கு முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்பதாலும், தொடக்கத்தில் இருந்து திமுகவில் பயணித்தவர் என்பதால் மு.பெ.சாமிநாதனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கியதற்கு முக்கியக் காரணம்" என்கின்றனர்.













