தொடர்ந்து சொத்துகளைப் பெருக்கும் இந்தியாவின் 1% பணக்காரர்கள்! - G20 அறிக்கை கூறு...
இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு 'நேரு'தான் காரணமா? - சசி தரூர் கருத்தும் வரலாறும்!
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இந்திய வாரிசு அரசியல் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றில் எழுதிய கட்டுரையில், இந்தியாவிலுள்ள வாரிசு அரசியலுக்கு நேருவும் காரணம் எனக் குற்றம்சாட்டி எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் என்று அக்கட்டுரையில் கூறியுள்ள அவர், "சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்.பி. பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்ட நேரு குடும்பத்தின் செல்வாக்கு இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் பிணைந்துள்ளது.
நேருவின் குடும்பம் பிறப்புரிமை அடிப்படையில் அரசியல் தலைவராகும் கருத்தாக்கத்தை வலிமைப்படுத்தியது. அது எல்லா கட்சிகளிலும், பகுதிகளிலும், எல்லா மட்டத்திலும் பரவியுள்ளது" என்கிறார் சசி தரூர்.

ஆனால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு வாரிசு அரசியலை அறிமுகப்படுத்தவில்லை என்பதே வரலாறு சொல்லும் உண்மை. நேரு குடும்பம் அரசியல் செல்வாக்குமிக்கதாக இருப்பதற்கு அந்தக் குடும்பத்துக்கு வெளியே உள்ள இரண்டு நபர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். முதலாவது லால் பகதூர் சாஸ்திரி, இரண்டாவது காமராஜர்.
நேருவின் தேர்வு
நேரு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது உடனடியாக சாஸ்திரிக்கு கேபினெட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் நேரு தனது விருப்பமாக இல்லாமல் கட்சிதான் பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் விரும்பினார்.
சிபி ஶ்ரீனிவாஸ்தவா 1995ம் ஆண்டு எழுதிய Lal Bahadur Shastri: A Life of Truth in Politics புத்தகத்தில், தன்னுடைய அரசியல் வாரிசு குறித்து நேரு, "அதை கட்சி முடிவு செய்யும். எனக்கு தனிப்பட்ட விருப்பங்கள் இல்லை. ஆனால் அது என் மகளாக மட்டும் இருக்கக் கூடாது" எனக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஜெய்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், "தலைமைத்துவம் என்பது சொத்து போல கடத்தப்படும் என்று யாரும் கற்பனை கூட செய்து பார்க்கக் கூடாது. அதனைச் சேவை மற்றும் தியாகத்தின் மூலம் சம்பாதிக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார் நேரு.
நேருவின் இந்த உறுதியான நிலைப்பாட்டைக் கடந்து இந்திரா காந்தி பிரதமரானது எப்படி?
மொரார்ஜி தேசாயின் விரக்தி
1966, ஜனவரி 11ம் தேதி உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கந்தில் சோவியத் மத்தியஸ்தத்தில் பாகிஸ்தானுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இறந்தார்.
டெல்லியில் இருந்து சென்னை, பாம்பே, லக்னோ, பாட்னா எனச் செய்தி உடனடியாகப் பரவியது. மாநிலங்களில் காங்கிரஸின் நிழல் முதலாளிக் குழுக்கள் தங்களுக்குள் சலசலக்கத் தொடங்கின.
1964ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டிருந்த மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரியை விட மிகக் குறைந்த வாக்குகளையே பெற்றிருந்ததனால் அவமானமாக உணர்ந்திருந்தார்.

இந்தமுறை மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதால் உடனடியாக அகமதாபாத்திலிருந்து டெல்லிக்குச் சென்றார். அவர் 1964 முதலே தயாராக வைத்திருந்த சஃப்தர்ஜங் சாலையில் உள்ள வீட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு தானே கட்சியில் மூத்தவர் என்பதால் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
"நாட்டுக்கு நிலைத்தன்மைதான் வேண்டும், சோதனை முயற்சிகள் அல்ல" என வழியுறுத்தியுள்ளார். ஆனால் காங்கிரஸ் வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது.
காங்கிரஸ் திட்டம்
அப்போது காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்குப் புத்துணர்வூட்ட தனது சொந்த பதவியிலிருந்து விலகி 'காமராஜர் திட்டம்' என்ற நடவடிக்கையை மேற்கொண்டவர். தென்னிந்தியாவில் இருந்த 103 எம்.பிக்கள் மீதும் செல்வாக்குடன் இருந்தார்.
காமராஜர் 1964 முதல் காங்கிரஸ் தலைவராக இருந்தார். மொரர்ஜி ஆணவமானவர் என்றும் சாஸ்திரி வளைந்துகொடுக்கக் கூடியவர் என்றும் கருதியதாலேயே சாஸ்திரியை ஆதரித்து பிரதமராக்கினார்.
தலைவராக இருந்த காலத்தில் அதுல்ய கோஷ் (வங்காளம்), எஸ். நிஜலிங்கப்பா (மைசூர்), எஸ்.கே. பாட்டீல் (பம்பாய் நகரம்), மற்றும் சஞ்சீவ ரெட்டி (ஆந்திரா) போன்ற பிராந்திய தலைவர்களுடன் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.
ஜனவரி 13ம் தேதி தனது தற்காலிக இருப்பிடத்தில் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் காமராஜர். கோஷ், நிஜலிங்கப்பா, பாட்டீல் மற்றும் சி.பி. குப்தா (உ.பி.), தற்காலிக பிரதமர் குல்சாரி லால் நந்தா ஆகியோர் அதில் கலந்துகொண்டனர். குல்சாரி லால் நந்தா நிரந்தரமாக பிரதமர் பதவியில் தங்கிவிடும் கனவுடன் இருந்தார்.
காமராஜர், மொரார்ஜி தேசாய்க்கு எதிரான ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். ஏனென்றால் அவரது கண்டிப்பான தூய்மைவாதம் கட்சியைப் பிளவுபடுத்தும் என நம்பினார். மதுவிலக்கு, பசுவதை தடை, சோசலிஸ்டுகளுடன் சமரசம் இல்லாமை ஆகியவற்றில் மொரார்ஜி விடாப்பிடியாக இருந்தார். ஆனால் கட்சியின் மையத்திலிருந்து அனைத்தையும் ஒருங்கிணைக்கும் நபரைத் தேடினார் காமராஜர்.

பல பரிந்துரைகளுக்கு இடையில், 'இந்திராவைப் பற்றி என்ன?' என்னக் கேட்டார் காமராஜர்.
ஊமை பொம்மை - இந்திரா
அப்போது 48 வயது பெண்ணான இந்திரா காந்தி, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராகச் செயல்பட்டு வந்தார். ஒரு லட்சியவாத அரசியல் தலைவராக இல்லாமல் தந்தையின் மரணத்தால் வேதனையடைந்துள்ள மகளாகவே பார்க்கப்பட்டார். அந்த அறையில் இருந்த காங்கிரஸ் புள்ளிகள் இந்திரா ஒரு ஊமை பொம்மையாக இருப்பார் என நம்பினர். ஏனென்றால் அவருக்கு வலுவான அரசியல் தளம் கிடையாது.
குழுவின் முடிவைக் கடந்து குல்சாரி லால் நந்தா, தலித் தலைவர் ஜக்ஜீவன் ராம், ஜாட் தலைவர் சரண் சிங் மற்றும் தேசாய் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க எம்பிக்களைத் தொடர்புகொண்டு ஆதரவு தேடினர். ஆனால் இந்திரா அமைதியாக இருந்தார். ஜனவரி 14 முதல் 18 வரை, காமராஜரின் இயந்திரம் தீவிரமாக இயங்கியது.
இதில் மற்றொரு முக்கிய பங்கு வகித்தவர் உத்தரபிரதேசத்தின் அப்போதைய முதலமைச்சர் சி.பி.குப்தா. சரண் சிங்கின் எழுச்சி குறித்து கவலையடைந்த அவர், தனது செல்வாக்கில் உள்ள 70+ எம்.பிக்கள் இந்திராவுக்கு வாக்களிக்க வைப்பதாக உறுதியளித்தார்.

இந்த நடவடிக்கைகள் தேசாயை அச்சுறுத்தின. அவர் ஜனவரி 17ம் தேதி, வம்சாவளி ஆட்சியை எதிர்த்தும், தூய்மையான நிர்வாகத்தைத் தருவதாகவும் கூறி ஊர்வலம் சென்றார். உண்ணாவிரதம் கூட இருந்தார். ஆனால் அவரது பிரசாரத்தில் இளம் எம்.பிக்களை அங்கீகரிக்க மறுத்தார்.
மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் தானே மரியாதைக்கு உரியவர் என நம்பினார். காங்கிரஸில் சக்திவாய்ந்த பிராந்திய தலைவர்களைப் புறக்கணித்தது அவர் செய்த மற்றொரு மிகப் பெரிய தவறு.
இந்திராவின் வெற்றி
ஜனவரி 19ம் தேதி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. 524 எம்.பிக்கள் கலந்துகொண்டனர். இரண்டு வாக்குப் பெட்டிகள் - ஒன்று "இந்திரா" என்றும் மற்றொன்று "மொரார்ஜி" என்றும் குறிக்கப்பட்டு மேடையில் வைக்கப்பட்டன. காமராஜர் முதல் வரிசையில் அமர்ந்து நடப்பதைக் கூர்மையாகப் பார்த்தார்.
இரவு 9:15 மணிக்கு காங்கிரஸ் பொருளாளர் சாதிக் அலி அறிவித்தார்: இந்திரா காந்தி: 355, மொரார்ஜி தேசாய்: 169.
மொரார்ஜி எழுந்து இந்திராவின் கைகளைக் குலுக்கிவிட்டு சென்றார்.
காமராஜரின் அன்றைய வெற்றி மிகக் குறுகிய காலமே நீடித்தது. இந்திரா காந்தி காங்கிரஸ் கூட்டமைப்பு எண்ணியபடி கைப்பாவையாக இல்லை. 1971 வாக்கில் கட்சியைப் பிளவுபடுத்தி தனிப் பெரும் தலைவராக உருவெடுத்தார். கிங் மேக்கர் காமராஜர் ஏற்படுத்திய சூழ்நிலையிலிருந்து அது அவருக்கு கிடைத்தது. அது அவரது தந்தை நேருவின் விருப்பங்களுக்கு எதிரான ஒன்றாக இருந்தது, இன்றும் தொடர்கிறது.












