தொடர்ந்து சொத்துகளைப் பெருக்கும் இந்தியாவின் 1% பணக்காரர்கள்! - G20 அறிக்கை கூறு...
திருப்பூரில் சொத்து தகராறு? ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் பலியான சோகம்; நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ராமசாமி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (43). ஓவிய ஆசிரியர். இவரது மனைவி திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த கெளசல்யா (40). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தம்பதியரிடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. கெளசல்யாவின் தந்தை அருள்மரியனுக்கும் கௌசல்யாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. சொத்தை விற்பனை செய்த பணத்தைத் தனக்குக் கூடுதலாகக் கொடுக்க வேண்டுமென கெளசல்யா, கடந்த ஓராண்டாக தனது தந்தையிடம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அதற்கு கெளசல்யாவின் தந்தை மறுப்பு தெரிவித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணையுடன் வந்த கெளசல்யா, விரக்தி அடைந்த மனநிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பில் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

தொடர்ந்து உடலில் தீப்பற்றவே அலறியபடி ஓடினார். விடுமுறை நாள் என்பதால் அருகில் யாரும் இல்லை. தீக்காயம் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தார். அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், கெளசல்யாவை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 80 சதவீதம் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த கௌசல்யா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து கெளசல்யாவின் கணவர் பிரபாகரன் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் தற்கொலை வழக்குப் பதிந்து சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்து, நேற்று மாலை கணவர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர்.
















