இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு 'நேரு'தான் காரணமா? - சசி தரூர் கருத்தும் வரலாறும்...
Himachal: 8 வயது தலித் சிறுவன் மீது ஓராண்டாக தாக்குதல் - தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு
வட இந்திய மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் 8 வயது தலித் சிறுவனை தாக்கியதாகவும், கால்சட்டையில் தேளை விட்டு கொடுமைபடுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டபாணி, ரோஹ்ரு பகுதியில் உள்ள அரசு ஆரம்பநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனின் தந்தை அளித்துள்ள புகாரின்படி, தலைமை ஆசிரியர் தேவேந்திரா, ஆசிரியர்கள் பாபு ராம், கிருத்திகா தாக்கூர் கடந்த ஓராண்டாக சிறுவனை தாக்கி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

புகாரின் படி, தொடர்ந்து சிறுவனைத் தாக்கியதால் அவனது காதிலிருந்து ரத்தம் வரத் தொடங்கி, காதுமடல் (Ear Drum) சேதமடைந்துள்ளது. சிறுவனை கழிப்பறைக்கு தூக்கிச் சென்று கால்சட்டைக்குள் தேள் விட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
காவல்துறையினர் ஆசிரியர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 127(2) (தவறான சிறைவாசம்), 115(2) (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 351(2) (குற்றவியல் மிரட்டல்), 3(5) (பொது நோக்கத்தை நிறைவேற்றும் குற்றச் செயல்கள்) மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தையை கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனுடன் SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்திலும் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தையிடம், 'பள்ளியில் நடக்கும் கொடுமைகளை வீட்டில் சொன்னால் உன்னை கைது செய்துவிடுவார்கள்' எனக் கூறி ஆசிரியர்கள் மிரட்டியுள்ளனர்.
கடந்த அக்டோபர் 30ம் தேதி, அந்த சிறுவனை பள்ளியை விட்டு அனுப்பிவிடுவதாகவும், இதுகுறித்து வெளியில் கூறினால் சிறுவனின் குடும்பத்தினர் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவரது தந்தையை மிரட்டியுள்ளார் தலைமை ஆசிரியர்.

மேலும் அந்த புகாரில் கிருத்திகா தாக்கூர் என்ற ஆசிரியைக்குப் பதிலாக அவரது கணவர் நிதிஷ் தாக்கூர் ஓராண்டுக்கும் மேலாக குழந்தைகளுக்குப் பாடமெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பள்ளியில் மாணவர்களை சாதி ரீதியாக பாகுபாடு பார்த்து பிரித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தலித் மற்றும் நேபாளி மாணவர்கள் உணவு வேளையில் ராஜ்புத் சமூக மாணவர்களிடமிருந்து தனித்து அமர வைக்கப்பட்டுள்ளனர்.
ரோஹ்ருவில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தாக்குவது அல்லது சாதிப் பாகுபாடு காட்டுவது இது முதல் சம்பவம் அல்ல. கடந்த வாரம், ரோஹ்ருவின் கவானா பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் முட்களால் அடித்ததற்காக ஆசிரியர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக, ரோஹ்ருவில் உள்ள லிம்டா கிராமத்தில் 12 வயது தலித் சிறுவன் ஒருவனை, தங்கள் வீட்டிற்குள் நுழைந்ததற்காக சில மாற்று சாதிப் பெண்கள் மாட்டுத் தொழுவத்தில் அடைத்து வைத்ததால், அவன் தற்கொலை செய்து கொண்டதாகக் செய்திகள் வெளியாகின.















