"கொலை முயற்சி தாக்குதல்; அன்புமணி தான் காரணம்" - பாமக எம்.எல்.ஏ அருள்
சிவகாசி: வீட்டில் பிரசவம் பார்த்த அசாம் தம்பதி; செவிலியரை இடைநீக்கம் செய்ய பரிந்துரை; என்ன நடந்தது?
சிவகாசியில் சாரதா நகர் பகுதியில் வசிப்பவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஜூலில் - அஷ்மா காத்துன் தம்பதி. சிவகாசியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை பார்த்து வரும் இவர்களுக்கு ஏற்கனவே 9 வயது, 7 வயது, 5 வயது 3 வயதில் 4 குழந்தைகள் உள்ள நிலையில் 5வது முறையாக அஷ்மா காத்துன் கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியான அஷ்மா காத்துனுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டில் வைத்து அவராகவே பிரசவம் பார்த்துள்ளார். அவர்களுக்கு 5வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுகாதார துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த கங்காகுளம் பகுதி கிராம சுகாதார செவிலியர் கிரேஸ் வீட்டில் வைத்து பிரசவம் நடந்ததை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் தாய், சேய் இருவரையும் ஆட்டோவில் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு வைத்து பிரசவம் நடந்தது போல் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தாய் மற்றும் குழந்தை தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவமறிந்த சுகாதார துறை அதிகாரிகள் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த பெண்ணின் கணவர் அப்துல் ஜூலிலை விசாரித்தபோது, ஏற்கனவே பிறந்த தங்களது குழந்தைகள் நான்கு பேரையும் அசாமில் இருந்தபோது வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்ததாகவும், அந்த வகையில் 5வது குழந்தையும் தானே பிரசவம் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரைக் கண்டித்ததுடன், கங்காகுளம் கிராம சுகாதார செவிலியர் கிரேஸ் என்பவரைப் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து சிவகாசி சுகாதார துணை இயக்குநர் ஜெகவீர பாண்டியன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.





















