TVK : 'கரூர் சம்பவத்துக்கு பிறகு வெளியில் வரும் விஜய்!' - சிறப்புப் பொதுக்குழுவி...
தமிழ் பேசிய சினிமாவை, தமிழ் சினிமாவாக மாற்றியவர் பாரதிராஜா - 5 நாட்கள் விழா எடுக்கும் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரைப்படம் மற்றும் கலாச்சார நிறுவனமான (iifc), வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் காட்சித் தகவலியல் துறையுடன் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவைக் கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்துகிறது. 'தமிழ் பேசிய சினிமாவை தமிழ் சினிமாவாக மாற்றிய பாரதிராஜா' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் பாரதிராஜாவின் படங்கள் திரையிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படம் குறித்த விவாதங்களும், உரையாடலும் நடை பெறுகிறது.
காலத்தை வென்ற காவிய படைப்புகளை தந்த கலை ஆளுமையை கொண்டாடும் வகையில் இயக்குநர் வெற்றிமாறனின் ஐ.ஐ.எஃப்.சி, சில மாதங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவாளர், இயக்குநர் பாலு மகேந்திராவின் படைப்புகளை கொண்டாடியது. அதனை தொடர்ந்து இப்போது இயக்குநர் பாராதிராஜாவிற்கான நிகழ்வை கொண்டாவிருக்கிறது.

வருகிற நவம்பர் 7ம் தேதியில் தொடங்கும் இந்நிகழ்வு, வரும் 11ம் தேதி வரை நடைக்கிறது. தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் இயக்குநர் பாரதிராஜாவின் '16 வயதினிலே', 'கிழேக்கே போகும் ரயில்', 'புதிய வார்ப்புகள்', 'நிழல்கள்', 'அலைகள் ஓயவதில்லை', 'மண் வாசனை', ஒரு கைதியின் டைரி', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'கிழக்கு சீமையிலே' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
மேற்கண்ட படங்களின் திரையிடலைத் தொடர்ந்து அதில் இடம்பெற்ற திரைக் கலைஞர்கள் பங்கேற்று, பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். நிகழ்வு நடக்கும் அத்தனை நாட்களிலும் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொள்கிறார். இயக்குநர் அமீர், சத்யராஜ், 'கடலோர கவிதைகள்' நாயகி ரேகா, ஆர்.கே.செல்வமணி , சேரன் உள்பட பலரும் பங்கேற்கிறார்கள்.

இது குறித்து விசாரிக்கையில், ''தலைசிறந்த கதைசொல்லியான இயக்குநர் பாரதிராஜாவைக் கொண்டாடும் விதமாகவும் அவருக்கு நாம் செலுத்தும் முதல் மரியாதையாகவும் இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது. IIFCயின் "தடம் பதித்த படைப்பாளுமைகளை கொண்டாடுவோம்" என்ற நிகழ்ச்சி தொடரில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இயக்குநரின் படங்களின் திரையிடல்கள், பங்கு பெற்றவர்களின் உரையாடல்கள், படங்களைத் தெரிவு செய்தல் முதலிய சுவாரஸ்யமான நிகழ்வுகள் இதில் இடம் பெறும்.

நம் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மாபெரும் படைப்பாளியின் பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமையுணர்ச்சி இது. நம் பாசத்திற்குரிய பாரதிராஜாவிற்காக இந்த நிகழ்வை வெற்றிமாறனின் ஆய்வகம் எடுக்கிறது'' என்கிறார்கள்.


















