'DMK-ல் Manoj Pandian' 4 மண்டலத்தில் 4 பேர், Stalin மெகா ஸ்கெட்ச்! | Elangovan E...
TVK : 'கரூர் சம்பவத்துக்கு பிறகு வெளியில் வரும் விஜய்!' - சிறப்புப் பொதுக்குழுவின் திட்டம் என்ன?
கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக வெளியில் வந்து நிர்வாகிகள் மத்தியில் பேசவிருக்கிறார் விஜய். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவதோடு அரசியல்ரீதியாக நிறைய செய்திகளை கடத்தக் கூடியதாகவும் இந்த நிகழ்வு இருக்கும் என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

கரூர் சம்பவம் நடந்து ஒரு மாதமாக எந்த செயல்பாட்டிலும் ஈடுபடாமல் இருந்தார் விஜய். வழக்கமாக எல்லா பிரச்னைகளுக்கும் அறிக்கை விடும் விஜய், எந்த பிரச்னைக்கும் அறிக்கை கூட விடாமல் தவிர்த்து வந்தார். ஒரு மாதத்திற்கு பிறகு கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். அதன்பிறகே நெல் கொள்முதல் பற்றியும் SIR பற்றியும் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க ஒரு நிர்வாகக்குழுவையும் அமைத்திருந்தார். அந்த நிர்வாகக்குழுவின் முதல் கூட்டத்தில்தான் சிறப்புப் பொதுக்குழு பற்றி அறிவிக்கப்பட்டது. கட்சியின் கட்டமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதை பற்றி அறிவிக்கவும், 2026 தேர்தல் கூட்டணி சார்ந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும்தான் இந்த சிறப்புப் பொதுக்குழு என்கின்றனர் முக்கிய நிர்வாகிகள்.

மதுரை மாநாட்டிலிருந்து 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்!' என ஒரு பிரசாரத்தை தவெக தொடங்கியது. அதன் மூலம் விஜய்யை மட்டுமே பிரதானப்படுத்தி திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் 2026 இல் போட்டி என்பதைப் போல Perception யை உருவாக்கும்விதத்தில் வியூகங்களை வகுத்து செயல்பட்டு வந்தனர். தவெக தலைமையில்தான் கூட்டணி எனும் முடிவுக்கு வந்துவிட்டதால் மதுரை மாநாட்டிலும் கரூருக்கு முன்பாக பேசிய நாமக்கலிலும் அதிமுகவின் இப்போதையை தலைமையை விஜய் விமர்சித்து பேசியிருப்பார்.
அந்த டெம்போவை அப்படியே மெயிண்டெயின் செய்து திமுக vs தவெக என களத்தை கொண்டு செல்வதுதான் தவெகவின் எண்ணம். ஆனால், கரூர் சம்பவத்துக்கு பிறகு நிலைமை மாறியது. திமுக தவெக மீது கடும் தாக்குதல்களை முன்னெடுக்க அதிமுகவும் பாஜகவும் விஜய்க்கு பரிந்து பேசியது. தன்னுடைய பிரசாரத்தில் பறந்த தவெக கொடிகளை பார்த்து விஜய்க்கு சூசகமாக கூட்டணி அழைப்பு விடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இன்னொரு பக்கம் ராகுல் காந்தியும் அமித் ஷாவும் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினர். இதெல்லாம் விஜய் கூட்டணிக்கு செல்லப்போகிறார்.

குறிப்பாக, NDA உடனோ அல்லது பாஜக அல்லாத அதிமுகவோடோ கூட்டணிக்கு செல்லப்போகிறார் எனும் கருத்தாக்கத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தியது. இது வரை ஆண்ட கட்சிகள் மக்களுக்கு எதையும் செய்யவில்லை எனக் கூறி அரசியல் செய்ய வந்திருக்கும் விஜய் அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தால் நீண்ட கால அடிப்படையில் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்காது என விஜய் தரப்பு நினைப்பதாக கூறுகின்றனர். மேலும், இந்த கருத்தாக்கத்தை அப்படியே விட்டால் நம்மை முதன்மை சக்தியாக மக்கள் மனதில் நிலைப்படுத்த முடியாது என்றும் விஜய்யின் வியூக தரப்பு நினைக்கிறது.
அதனால் இந்த பொதுக்குழுவிலும் திமுக எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சமீபமாக நடந்த நெல் கொள்முதல் பிரச்னை, சூழலியல் பிரச்னைகள், கோவை பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி பெண்கள் பாதுகாப்பு சார்ந்து என முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கின்றனர். மீனவர்கள் சிறைபிடிப்பு, வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தம் போன்றவற்றை முன்வைத்து மத்திய அரசை சாடும் வகையிலும் தீர்மானங்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர்.

'தவெக தலைமையில்தான் கூட்டணி. முதல்வர் வேட்பாளர் நான்தான்!' என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யும் வகையில் விஜய்யின் பேச்சு இருக்கும் என்கின்றனர். திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி நாம் தனித்துதான் நிற்கப்போகிறோம். சோர்வடையாமல் களத்தில் இறங்கி பணி செய்யுங்கள் என்பதுதான் விஜய் அவரது நிர்வாகிகளுக்கு கொடுக்கப்போகும் மெசேஜ் என்கின்றனர். பீகார் தேர்தலுக்கு பிறகு கதர் கட்சியினரின் பார்வை பனையூர் பக்கமாக திரும்பும் என்றும் விஜய் தரப்பில் ஒரு குழு தீவிரமாக நம்பிக்கொண்டிருக்கிறதாம்.
மேலும், கட்சிரீதியாக கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக சில மண்டலங்களாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்கவிருக்கிறார்கள். அதற்கான அறிவிப்புமே பொதுக்குழுவில் வெளியாகும் என்கின்றனர். கரூர் சம்பவம் சிபிஐ விசாரணையின் கீழ் இருப்பதால் விஜய் அதை அவ்வளவு தீவிரமாக தொட்டு பேசமாட்டார் என்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இனி நம்முடைய குடும்பங்கள் என்றும் உண்மைகள் விரைவில் வெளிவரும் என எமோஷனல் டச் மட்டுமே வைத்து முடிக்கவிருப்பதாகவும் சொல்கின்றனர் முக்கிய நிர்வாகிகள்.















