``கவாஸ்கர் சார் கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கேன்" - வாக்குறுதியை நினைவூட்டிய ஜ...
``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" - வைரலாகும் மிதாலி ராஜ் பேட்டி
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று முன்தினம் (நவம்பர் 2) முடிந்த முடிந்த ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று அரை நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியது.
இதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் இந்திய மகளிர் அணிக்கு ரூ. 51 கோடி பரிசுத்தொகை அறிவித்திருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ஐ.சி.சி சார்பில் சுமார் ரூ. 40 கோடி பரிசுத்தொகை, இந்திய வீராங்கனைகளுக்கு சூரத் வைர வியாபாரியின் வைர நகை, சோலார் பேனல் அறிவிப்பு எனப் பட்டியல் நீள்கிறது.
இந்த நிலையில், 2005-ல் இந்திய அணியை முதல்முறையாக மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இரண்டாம் இடம் பிடித்தபோது அணியினருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறியிருக்கும் சமீபத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் லாலன்டாப் (Lallantop) என்ற தனியார் ஊடகத்துக்கு அளித்திருந்த அந்தப் பேட்டியில் மிதாலி ராஜ், ``அப்போது வருடாந்திர ஒப்பந்தங்கள் எதுவும் கிடையாது. போட்டிக் கட்டணம் கிடையாது.
2005 மகளிர் உலகக் கோப்பையில் நாங்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தபோது ஒரு போட்டிக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது.
அதுவும் அந்தத் தொடருக்காக மட்டுமே. அதைத் தவிர போட்டிக் கட்டணம் எதுவும் நாங்கள் பெறவில்லை.
விளையாட்டில் பணம் இல்லை, எனவே போட்டிக் கட்டணத்தை மட்டும் எங்கிருந்து பெறுவது?

இந்தப் போட்டிக் கட்டணங்கள் மற்றும் வருடாந்திர ஒப்பந்தங்கள் எல்லாம் பி.சி.சி.ஐ-யின் கீழ் வந்தபோது கிடைக்கத் தொடங்கின (1973 முதல் 2006 வரை இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் WCAI எனும் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு, பின்னர் 2006-ல் BCCI-யுடன் இணைக்கப்பட்டது).
முதலில் ஒவ்வொரு தொடர், அதன் பிறகு ஒவ்வொரு போட்டி எனக் கட்டணம் வழங்கப்பட்டது. சமீபத்தில்தான், ஆண்கள் அணிக்குச் சமமான ஊதியம் வழங்கப்பட்டது" என்று கூறினார்.
இன்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள் கிரிக்கெட்டில் நுழைவதற்கு ஒரு தலைமுறையின் ரோல் மாடலாகத் திகழ்ந்து மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவை உலக அரங்குக்கு கொண்டு சென்ற மிதாலி ராஜ் தலைமையில் 2005, 2017 என இருமுறை உலகக் கோப்பை (ODI) இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியிருக்கிறது.
இதில், 2017 இறுதிப்போட்டியில் வெறும் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் கோப்பையை இழந்தது.

2022 அக்டோபரில் அப்போதைய பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளின் வீரர்கள், வீராங்கனைகள் சமமான போட்டிக் கட்டணத்தைப் பெறுவார்கள் என்று அறிவித்தார்.
அதன்படி இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒரு டெஸ்டுக்கு ரூ.15 லட்சம், ஒரு ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், ஒரு டி20க்கு ரூ.3 லட்சம் என போட்டிக் கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















