"விருதுகள் என்பது போட்டியை ஏற்படுத்த அல்ல" - 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்ற மம்ம...
ICC-ஐ விட அதிக பரிசுத் தொகையை அறிவித்த BCCI; கூடுதலாக சூரத் வைர வியாபாரியின் சர்ப்ரைஸ் கிஃப்ட்!
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அரை நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியிருக்கிறது.
நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா.
இந்த நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ஐ.சி.சி சார்பில் ஒதுக்கப்பட்டிருக்கும் பரிசுத்தொகை மட்டுமின்றி, பி.சி.சி.ஐ தனியாக ஐ.சி.சி-யை விட அதிக பரிசுத்தொகையை இந்திய மகளிர் அணிக்கு அறிவித்திருக்கிறது.

முதலில் இந்த மகளிர் உலகக் கோப்பைக்கான ஐ.சி.சி பரிசுத்தொகை என்பது மொத்தம் ரூ. 123 கோடி. இது கடந்த உலகக் கோப்பைக்கு (2022) ஒதுக்கப்பட்ட பரிசுத்தொகையை (ரூ. 31 கோடி) விட நான்கு மடங்கு அதிகம்.
இன்னும், சொல்லப்போனால் 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையில் கூட ரூ. 89 கோடிதான் மொத்த பரிசுத்தொகையாக ஐ.சி.சி அறிவித்திருந்தது.
தற்போது இந்த மகளிர் உலகக் கோப்பையில் ஐ.சி.சி-யின் மொத்த பரிசுத்தொகையான ரூ. 123 கோடியில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு சுமார் ரூ. 40 கோடி, இரண்டாம் இடம்பிடித்த தென்னாப்பிரிக்காவுக்கு சுமார் ரூ. 20 கோடி, அரையிறுதிப் போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு தலா சுமார் ரூ. 10 கோடி செல்லும்.
இவ்வாறிருக்க, பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைகியா, இந்திய அணிக்கு ரூ. 51 கோடி பரிசுத்தொகை அறிவித்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் பேசிய தேவஜித் சைகியா, ``இந்த நேரத்தில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷாவுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும்.
ஏனெனில், இந்தத் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையின் பரிசுத் தொகையை உயர்த்தினார். சுமார் 300 சதவிகிதம் உயர்ந்தது.

டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதில் பி.சி.சி.ஐ மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.
எனவே, ஐ.சி.சி-யின் பரிசுத்தொகை மட்டுமல்லாது, பி.சி.சி.ஐ தனியாக ரூ. 51 கோடி பரிசுத்தொகை வழங்கப்போகிறது. இந்தத் தொகையானது, வீராங்கனைகள், அணித் தேர்வாளர்கள், தலைமைப் பயிற்சியாளர் அமோல் முசும்தார் உள்ளிட்ட பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்குச் செல்லும்" என்று தெரிவித்திருக்கிறார்.
இவை மட்டுமல்லாது, சூரத் வைர வியாபாரியான ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும், மாநிலங்களவை உறுப்பினருமான கோவிந்த் தோலாகியா, சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் ஒவ்வொருவருக்கும் வைர நகை மற்றும் சோலார் பேனல் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
கடந்த 2024-ல் ஆடவர் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்குப் பி.சி.சி.ஐ ரூ. 125 கோடி பரிசுத்தொகை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

















