"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்த...
"விருதுகள் என்பது போட்டியை ஏற்படுத்த அல்ல" - 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்ற மம்மூட்டி
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் 'பிரம்மயுகம்' படத்திற்காக 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்றுள்ளார்.
இதையடுத்து வாழ்த்துத் தெரிவித்து மம்மூட்டியின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அப்போது வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்மூட்டி, "என்னோட சேர்ந்து நிறைய இளம் நடிகர்களும் விருதுகளை வென்றிருக்கின்றனர். அவர்களோட சேர்ந்து நானும் விருது பெற்றிருப்பதில் மகிழ்ச்சி, நானும் இளமையாகவே உணர்கிறேன். இளம் நடிகர்களோடு போட்டியாக இல்லை, சேர்ந்து பயணிக்கிறேன் என்பதே மகிழ்ச்சி.
விருதுகள் என்பது நம் பயணத்தை ஊக்குவிக்க, போட்டியை ஏற்படுத்த அல்ல" என்று பேசியிருக்கிறார்.

'பிரம்மயுகம்' படத்திற்காக மம்மூட்டிக்கு 'தேசிய விருது' கிடைக்கும் என்று திரைத்துறையைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மம்மூட்டிக்கு தேசிய விருது வழங்கப்படாதது பலருக்கும் வருத்ததை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கேரள அரசு மம்மூட்டிக்கு 'பிரம்மயுகம்' படத்திற்காக 'சிறந்த நடிகர்' விருதை அறிவித்திருப்பதைப் பலரும் மகிழ்ச்சியடைந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மோகன் லால், "கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சிறந்த நடிகருக்கான விருதை வென்றதற்காக எனது சகாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருதை வென்றதற்காக ஷாம்லா ஹம்சாவுக்கும், சிறந்த இயக்குனர் விருது பெற்ற சிதம்பரத்திற்கும் வாழ்த்துக்கள்.
சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதற்காக மஞ்சும்மள் பாய்ஸுக்கு ஒரு பெரிய பாராட்டு. விருதுகளை வென்ற ஆசிஃப் அலி, டோவினோ தாமஸ், ஜோதிர்மயி மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோருக்கும் பாராட்டுகள்." என்று பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.


















