"விருதுகள் என்பது போட்டியை ஏற்படுத்த அல்ல" - 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்ற மம்ம...
ராணிப்பேட்டை: காமராஜர் தங்கி இருந்த நினைவகம் சீரமைப்பு - திறந்து வைத்து பெருமிதப்பட்ட உதயநிதி!
ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ராணிப்பேட்டைக்கு வந்திருந்தார். இதன் ஒருப்பகுதியாக, ராணிப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் தங்கி இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவகம் பழைமை மாறாமல், ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், அந்த நினைவகத்தை நேரில் சென்று திறந்து வைத்து பார்வையிட்டார் உதயநிதி ஸ்டாலின்.
`வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது கர்மவீரர் காமராஜரும், தியாகி கல்யாண ராமனும் தங்கியிருந்து செயல்திட்டம் வகுத்தது, இந்த இல்லத்தில் இருந்து தான்.

அதாவது, 1942 ஆம் ஆண்டு பம்பாயில் (மும்பை) மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற `வெள்ளையனே வெளியேறு’ மாநாடு, ஆங்கிலேயர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மகாத்மா காந்தி உட்பட முன்னணி தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய பெருந்தலைவர் காமராஜரையும் கைது செய்யத் தயாராக இருந்தார்கள் ஆங்கிலேய அதிகாரிகள்.
மாநாட்டின் தீர்மானத்தை தமிழகம் முழுவதும் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தனக்கு இருந்ததால் காமராஜர் அரக்கோணம் ரயில் நிலையத்திலேயே இறங்கி யார்க் கண்ணிலும் படாமல் ராணிப்பேட்டையில் உள்ள தன் நண்பரான தியாகி கல்யாண ராமனின் வீட்டுக்கு வந்துசேர்ந்தார்.
அவரின் வீடு சிறியதாகவும், காவல்துறையின் கண்காணிப்பிலும் இருந்ததால் தன் நண்பரான ஏ.பி.சுலைமானை அணுகி அவ்விடத்தில் காமராஜரை தங்கவைத்து, இருவரும் நீண்ட ஆலோசனை செய்து போராட்ட நகல்களை தயாரித்துகொண்டு வேலூர் வழியாக ஆங்கிலேய காவலர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பித்துசென்றனர்.
பின்னர், தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து அப்போராட்டத்தை விளக்கி தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெறச் செய்தார்கள்.

இதையடுத்து, காமராஜரும், கல்யாணராமனும் கைது செய்யப்பட்டு நீண்ட சிறைவாசம் பெற்றனர்.
``சுதந்திரப் போராட்ட உணர்வைத் தூண்டும் நோக்கில், காமராஜர் மறைந்து இருந்து செயலாற்ற காரணமாக இருந்த ராணிப்பேட்டை இல்லத்தை அவரின் நினைவாக சீரமைத்து, நினைவு சின்னமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, நினைவகம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த இல்லத்தை இன்று நாம் திறந்து வைத்தோம். பெருந்தலைவர் காமராஜரின் தியாகத்தை என்றென்றும் போற்றுவோம்’’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்தோடு குறிப்பிட்டிருக்கிறார்.















