"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்த...
SIR: தமிழ்நாட்டில் நாளை தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained
தமிழ்நாட்டில் நாளை முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்குகிறது.
இந்த வார்த்தை ஒலிக்க ஆரம்பத்தில் இருந்தே, இது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன. இதனால், SIR என்றால் என்ன? இது ஏன் நடத்தப்படுகிறது? இதில் நாம் என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன. அதற்கான பதில்களே இந்தக் கட்டுரை.
சிறப்பு தீவிர திருத்தம் என்றால் என்ன?
சிறப்பு தீவிர திருத்தம் என்றால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைவரும் இந்திய குடிமக்கள் தானா என்பதை சரிபார்ப்பது ஆகும்.

ஒருவேளை, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட நபர் இந்திய குடிமகன் இல்லையென்றால், அவரது பெயர் நீக்கப்படும். மேலும், இந்தத் திருத்தப் பணிகளில் போலி வாக்காளர்கள், இறந்தவர்களின் பெயர்களும் நீக்கப்படும்.
ஒருவரின் பெயர் ஒன்றிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் இருந்தால், இந்தத் திருத்தப் பணியின் போது, தற்போது குடியிருக்கும் தொகுதிக்கு மட்டுமே வாக்குரிமை மாற்றப்படும்.
இந்தத் திருத்தப் பணியை ஆங்கிலத்தில் Special Intensive Revision (SIR) என்று கூறுகிறார்கள்.
ஏன் இந்தத் திருத்தம் தேவை?
இந்தியாவில் கடைசியாக 2002-ம் ஆண்டில் இருந்து 2004-ம் ஆண்டு வரை இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின், இந்தத் திருத்தம் நடைபெறவே இல்லை.
தற்போது வாக்காளர் பட்டியலில் இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள், இறந்தவர்கள், போலி வாக்காளர்கள் என பலரின் பெயர்கள் பெருகிவிட்டன. இதனால், தேர்தலின் போது பல குளறுபடிகள் நடக்கின்றன.
இதை தவிர்க்கவும், சரி செய்யவும், தற்போது சிறப்பு தீவிர திருத்தத்தைக் கையிலெடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம், 'வாக்காளர் பட்டியலில் தகுதியான எந்தவொரு வாக்காளரின் பெயரும் விடுப்பட்டுப் போகக்கூடாது... தகுதியற்ற யாருடைய பெயரும் பட்டியலில் இருக்கக்கூடாது. இது தான் இந்தத் திருத்தத்தின் நோக்கம்' என்று கூறுகிறது.
இங்கே தேர்தல் ஆணையம் தகுதியற்றவர்கள் என்று கூறுவது, வெளிநாட்டினர், இறந்தவர்கள், போலி வாக்காளர், ஒன்றிற்கும் மேற்பட்ட தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் ஆவார்கள்.

இந்தத் திருத்தத்தின் நடைமுறை என்ன?
வாக்குச்சாவடி அலுவலர்கள் உங்கள் வீட்டிற்கே நேரில் வந்து வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தைக் கொடுப்பார்கள்.
அதில் 2004-ம் ஆண்டு நடந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, உங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பெயர், அடையாள எண், உறவினர் பெயர் போன்றவைகளும், அப்போது குறிப்பிட்டிருந்த உறவினரின் வாக்காளர் அட்டை தகவலும் கேட்கப்பட்டிருக்கும்.
அதை நீங்கள் தெளிவாக நிரப்பி, வாக்குச்சாவடி அலுவலரிடம் தர வேண்டும்.
ஒருவேளை, இந்தத் தகவல்கள் தெரியவில்லை... நியாபகம் இல்லையென்றால், voters.eci.gov.in-ல் இவற்றை தெரிந்துகொள்ளலாம் அல்லது வாக்குச்சாவடி அலுவலரிடமே இந்தத் தகவல்களைக் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
தகவல்களை நிரப்பி வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுக்கும்போது, இத்துடன் எந்தவொரு ஆவணத்தையும் தர வேண்டியதில்லை. இதை மிக முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒருவேளை, 2004-ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையென்றால்...?
நீங்கள் அந்தப் படிவத்தில் உங்கள் பெயர், அடையாள எண்ணுடன், உங்களது பெற்றோரின் பெயர், அவர்களது வாக்காளர் அடையாள எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
இந்த இடத்தில் நாம் இன்னொன்றும் தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது...
2004-ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன், 1987-ம் ஆண்டு இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்போது 18 வயது எட்டிய அனைத்து இந்திய குடிமக்களின் பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
1987-க்கு பிறந்தவர்களின் பெயர்கள், 2004-ம் ஆண்டு நடந்த சிறப்பு தீவிரத் திருத்தில் இடம்பெற்றிருக்காது. காரணம், அவர்கள் அப்போது 18-வயதை நிரம்பியிருக்கமாட்டார்கள்.
இதனால், இவர்கள் இந்த திருத்தத்தின் போது, தனது அம்மா அல்லது அப்பாவின் வாக்காளர் விவரத்தைக் கொடுக்க வேண்டும். இவர்களது பெற்றோரது பெயர் 1987-ம் ஆண்டு சிறப்பு தீவிரத் திருத்தத்தின் போதே, சரிபார்க்கப்பட்டிருக்கும். (இவர்களின் பெற்றோர்கள் இருவருக்குமே பிறப்பு சான்றிதழ் போன்றவை உள்ளதா என்பது பெரிய கேள்விக்குறி. இதனால், இந்த இடைவெளியில் பிறந்தவர்களுக்கு பெற்றோர் ஒருவரின் ஆவணம் மட்டும் போதும் என்கிற நடைமுறை).
2004-ம் ஆண்டுக்கு மேல் பிறந்தவர்கள், அவர்களுடைய மற்றும் அவர்களுடைய இரண்டு பெற்றோர்களின் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள்?
நீங்கள் பிறந்த இடம் மற்றும் பிறந்த தேதியை உறுதிப்படுத்துவதையே இங்கே ஆவணம் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆவணங்களில் அடையாள அட்டை, ஓய்வுதிய சான்றிதழ், பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 13 ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
சமீபத்திய தீர்ப்பில், உச்ச நீதிமன்றம், 'ஆதாரை ஆவணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது அடையாள ஆவணம் மட்டுமே... குடியுரிமை ஆவணம் அல்ல' என்று கூறியுள்ளது.
இதனால், ஆதாரை ஒரு ஆவணமாக சமர்ப்பித்தால், மேலே குறிப்பிட்டுள்ள வேறு எதாவது ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய ஆவணம்..?
பீகார் மக்கள் தற்போது அங்கே நடந்த தீவிர திருத்தப் பட்டியலில் தங்களது பெற்றோரின் பெயர் இடம்பெற்றிருந்தால், அந்த ஆவணத்தைக் காட்டி இங்கே வாக்குரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் மூலம், வெளி மாநிலத்தவருக்கு இங்கே வாக்குரிமை கிடைக்கும். தமிழ்நாட்டைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள் எப்படி இங்கே இருக்கும் கட்சிகளுக்கு வாக்காளிப்பார்கள்... அவர்கள் தேசிய கட்சிகளுக்கு தானே வாக்காளிப்பார்கள் என்கிற இங்கே உள்ள மாநில கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
உங்களிடம் இருந்து படிவம் பெற்ற பின் என்ன நடக்கும்?
உங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட படிவத்தை, பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்வார்கள். அது 2002-ம் ஆண்டு மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்படும்.
பின், இதை தேர்தல் பதிவு அதிகாரி சரிபார்ப்பார். அவருக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கும்பட்சத்தில், குறிப்பிட்ட நபரிடம் இருந்து ஆவணங்களைப் பெற சொல்வார்.
அதன் பின், வாக்காளர் பட்டியல் வரைவு செய்யப்பட்டு, உங்களுக்கு காட்டப்படும்.
ஏதேனும் திருத்தம் இருந்தால் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.

உங்களது பெயர் குறிப்பிட்ட தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டால்..?
வேறு தொகுதிகளின் தரவுகளோடு சரிபார்க்கப்பட்டு, இணைக்கப்படும்.
அப்போதும் பெயர் இல்லையென்றால், பெற்றோரின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்படும்.
அதிலும் இல்லை அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் வரைவு பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறாது.
அப்போது என்ன செய்ய வேண்டும்?
இந்தச் சூழலில் உரிய ஆவணங்களுடன் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். இதற்கு வருகிற டிசம்பர் 9-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்படும்.
உங்களது முகவரி மாறியிருக்கும் பட்சத்தில் அல்லது ஏதேனும் குழப்பங்கள் உள்ள பட்சத்தில், உங்களது பெயர் வரைவு பட்டியலில் இடம்பெறாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், வரைவு பட்டியலில் உங்களது பெயரை நீங்கள் செக் செய்வது மிக அவசியம் ஆகும்.
வாக்குச்சாவடி அதிகாரிகள் நேரில் வரும்போது நீங்கள் இல்லையென்றால்...?
படிவத்தைக் கொடுக்க வாக்குச்சாவடி அதிகாரிகள் நேரிலேயே உங்கள் வீட்டிற்கு வருவார்கள். அப்போது நீங்கள் வீட்டில் இல்லையென்றால் பிரச்னை இல்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடி அதிகாரிகளும் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று முறை செல்ல வேண்டும் என்பது விதிமுறை.
அதனால், அதற்கேற்ற மாதிரி நீங்கள் பிளான் செய்துகொள்ளலாம் அல்லது உங்களது வார்டு பூத் ஏஜென்டுகளின் உதவியை நாடலாம்.
நீங்கள் கொடுத்த தகவலில் குழப்பம் இருந்தால்...?
நீங்கள் கொடுக்கும் படிவத்தில் ஏதேனும் குழப்பம் இருந்தால், உங்கள் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதை தெளிவு செய்து, சரியான ஆவணத்தை நீங்கள் வாக்குச்சாவடி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் கட்டாயம் பிறந்த தேதி அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்.

வேறொரு ஊரில் தங்கியிருக்கிறீர்களா?
நீங்கள் பணி நிமித்தமாக வேறொரு ஊரில் தங்கியிருந்தால், உங்கள் பெற்றோரோ அல்லது இணையரோ உங்களுடைய ஆவணங்களை வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுக்கலாம்.
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
வாக்காளர் அட்டை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஃபார்ம் 6-ஐ நிரப்பி கொடுக்க வேண்டும். இத்துடன் உறுதிமொழி ஆவணத்தையும் தர வேண்டும். இவர்களது பெயர் வரைவு பட்டியலில் இடம்பெறாது. இறுதி பட்டியலில் தான் இடம்பெறும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க ஃபார்ம் 7-ஐ நிரப்பி தர வேண்டும்.
வெளி மாநிலத்தவர் மற்றும் மாற்றங்கள் செய்ய ஃபார்ம் 8-ஐ நிரப்பி தர வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் ஏதேனும் மாற்றம் இருந்தால் என்ன செய்வது?
அதற்கான விண்ணப்பத்தை வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும்.
முகவரி மாற்றத்தைப் பொறுத்தவரை, அதே தொகுதிக்குள் முகவரி மாற்றம் இருந்தால், வாக்குச்சாவடி அலுவலரிடமே தெரிவிக்கலாம்.
வேறு தொகுதிக்கு மாற்ற வேண்டுமானால், ஆட்சேபனை காலமான டிசம்பர் 9-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை முகவரி மாற்றத்திற்கான விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
யார் நீக்கப்படுவார்கள்?
இந்தச் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, தகுந்த ஆவணங்கள் இல்லையென்றால் தான் நீக்கப்படும்.

இந்தத் திருத்தத்தின் போது, நீங்கள் வைத்திருக்க வேண்டிய தகவல்கள் என்னென்ன?
வாக்காளர் எண், ஆதார் எண், மொபைல் எண், பெற்றோர் பெயர், பெற்றோர் வாக்காளர் அடையாள எண், தற்போதைய புகைப்படம் போன்றவற்றை தயாராக வைத்துகொள்ளுங்கள்.
முக்கியமான ஒன்று...
உங்களிடம் இரண்டு படிவங்கள் கொடுக்கப்படும். ஒன்று உங்களுக்கானது. இன்னொன்று வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுக்க வேண்டியது. உங்களுடைய தகவல்கள் தான் என்பதை உறுதிப்படுத்தவே இரண்டு படிவங்கள் கொடுக்கப்படுகிறது.
இதை இப்படியும் செய்யலாம்!
இந்த விண்ணப்பத்தை நீங்கள் இணையதளத்திலேயே கூட விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான தேதிகள் என்ன?
நவம்பர் 4 - டிசம்பர் 4, 2025 - சிறப்பு தீவிர திருத்தப் பணி.
டிசம்பர் 9, 2025 - ஜனவரி 8, 2026 - ஆட்சேபனை காலம், மேல்முறையீடு காலம்
டிசம்பர் 9, 2025 - ஜனவரி 31, 2025 - ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டை சரிபார்த்தால்.
பிப்ரவரி 7, 2025 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.
















