Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்க...
SIR: `இது சட்டவிரோதமானதா?' - திமுக குற்றச்சாட்டும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் விளக்கமும்!
இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. நேற்று முதல் பணிகளும் தொடங்கிவிட்டது.
திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் SIR நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் சூழலில், இதை விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது தமிழ்நாடு அரசு.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், பீகார் மாநில SIR வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.

அதே நேரத்தில், SIR வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்த இடைக்காலத்தில் தேர்தல் ஆணையம் அவசரமாக சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கொண்டு வருவது ஏற்க முடியாதது.
மத்திய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 169-ன்படி மத்திய அரசின் அரசிதழில் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு அதன் மூலமே வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) செய்யப்பட வேண்டும்.
அந்த முறையைப் பின்பற்றாமல் தேர்தல் ஆணையமே அறிவிப்பைத் தன்னிச்சையாக வெளியிடுவது, அரசியல் சட்டத்திற்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கும் எதிரானது. இப்போது செய்யப்பட்டுள்ள SIR அறிவிப்பே சட்டவிரோதமானது." என வெளிப்படையாக தெரிவித்திருக்கிறது.
எனவே, உண்மையிலேயே இந்த SIR சட்டவிரோதமானதுதானா என்ற கேள்வியுடன் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை தொடர்புகொண்டு பேசினோம்...
``அரசியலமைப்பு விதி 326-ன் படி ஒவ்வொரு இந்தியருக்கும் ஓட்டுரிமை இருக்கிறது எனப் பேசுகிறது. அதே நேரம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 21-ன் கீழ், தேர்தல் ஆணையம் உரிய காரணங்கள் அடிப்படையில், "வாக்காளர் சிறப்புத் திருத்தம்" (Special Revision) செய்ய மட்டுமே அதிகாரம் வழங்குகிறது.

ஆனால், தற்போது பயன்படுத்தப்படும் "சிறப்புத் தீவிரத் திருத்தம்" (Special Intensive Revision) என்பதில் இருக்கும் 'Intensive - தீவிர' என்ற வார்த்தை சட்டத்தில் இல்லை.
இந்த இரண்டு வார்த்தைக்கு மத்தியிலான சிக்கலைதான் தமிழ்நாடு அரசு சார்பில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
மேலும், சட்டத்தில் இல்லாத ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி ஒரு தீவிர நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, இது அடிப்படை அதிகாரத்தை மீறுவதாகும்.
சிறப்பு திருத்தம் என்றாலும், அதை தேர்தல் ஆணையம், தானே செய்துவிட முடியாது. அதற்கென சட்ட வரைமுறை இருக்கிறது. அதற்கு உட்பட்டுதான் தேர்தல் ஆணையம் செயல்பட முடியும். ஆனால் இந்த 'சிறப்புத் தீவிர திருத்தம்' விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அதையும் முறையாக பின்பற்றவில்லை.
பொதுவாக, வாக்காளர் பட்டியலில் உள்ள ஒரு பெயரை நீக்க வேண்டுமானால், தேர்தல் ஆணையம் அந்த நீக்கத்துக்கான காரணத்தைக் குறிப்பிட்டு, முறையான நோட்டீஸ் அனுப்பி, நீக்கப்படவிருக்கும் வாக்காளரின் விளக்கத்தைக் கேட்க வேண்டும்.
அவருக்கு தனிப்பட்ட விசாரணைக்கான (Personal Hearing) வாய்ப்பளிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் ஒரு வாக்காளரை நீக்க முடியும். ஆனால், தற்போதைய SIR திட்டத்தில், லட்சக்கணக்கான வாக்காளர்கள் மொத்தமாக நீக்கப்படுகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டம், சரத்து 21 வாழ்வுரிமை சட்டத்தின் படி, சட்டப்பூர்வ நடைமுறையின்றி ஒரு தனிநபரின் சுதந்திரத்தையோ, வாழ்வுரிமையையோ (வாழ்வுரிமையில் வாக்குரிமை உள்ளடக்கம்) பறிக்க முடியாது.
மேலும், சரத்து 14 (சமத்துவம்) அனைவருக்கும் நியாயமான நடைமுறையை உறுதி செய்கிறது. ஆனால், இந்த உரிமைகள் அனைத்தும் SIR மூலம் பறிக்கப்படுகிறது.
இதற்கு முன் 2002-2003-ல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதன் பணிகள் முழுமையாக ஓராண்டு கால அவகாசத்தை எடுத்துக்கொண்டது.
ஆனால், தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த சிறப்புத் தீவிரத் திருத்தம் மூலம், 6.36 கோடி வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்க, வெறும் ஒரு மாத அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் வெளி ஊரில், வெளி மாநிலத்தில், வெளிநாட்டில் இருக்கும் வாக்காளர்களால் ஒரு மாத காலத்துக்குள் எப்படி வந்து தங்கள் வாக்குறிமையை நிரூபிக்க முடியும்? எனவே, லட்சக்கணக்கான வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் திட்டமாக கருதுகிறேன்.

2002-க்குப் பிறகு, 2004, 2009, 2014, 2019, 2024 என தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு எந்த சிறப்புத் திருத்தத்தையும் தேர்தல் ஆணையம் செய்யவில்லை. ஆனால் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் குறிவைக்கப்படுகிறது.
22 ஆண்டுகள் கழித்து சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்றாலும், தேர்தல் ஆணையம் அந்தந்த மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளுடன் 'எப்படி இந்த சிறப்பு திருத்தத்தை முறையாகச் செய்யலாம்' எனக் கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும்.
ஆனால் அப்படி இல்லாமல் நேரடியாக தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுவது, தேர்தல் ஆணையத்தின் உள்நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
பிரதமர் மோடியும் இதே வாக்காளர்களின் வாக்கில்தானே பிரதமரானார் என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவே இல்லை.
ஒருவேளை 'வாக்காளர் திருத்தம்' செய்தாக வேண்டுமென்றால், அவசர அவசரமாக இந்த திருத்தப்பணியை மேற்கொள்ளாமல், ஒவ்வொரு தேர்தலுக்கும் வழக்கமாக செய்யும் வாக்காளர் திருத்தத்தை மேற்கொண்டிருக்கலாம்.
தேர்தல் முடிந்தபிறகு அமைதியாகவும், நிதானமகாவும், சட்டப்பூர்வமாக அறிவித்து சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொண்டிருக்கலாம். ஒரே நேரத்தில் 12 மாநிலங்களுக்கும் இந்த SIR செய்ய வேண்டிய தேவை என்ன?
ஏற்கெனவே வாக்காளராக இருக்கும் ஒருவர் வாக்காளரா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்குதான் இருக்கிறது. உதாரணமாக காவல்துறை ஒரு திருடனை கைது செய்கிறது என்றால், அந்த திருடன் குற்றவாளி என்பதை நிரூபிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு.
ஆனால், இந்த SIR-ல் மக்கள்தான் தங்கள் வாக்குரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நாட்டின் குடிமக்கள் தங்களை வாக்காளராக நிரூபிக்கும் சுமை மக்கள் மீதே சுமத்தப்படுகிறது. இது எல்லாமே சட்டவிரோதமான நடவடிக்கைதான்.
2003-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் '1987-க்கு முன்னால் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும்' என்ற கால வரையறையை முன்வைத்து குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதையொட்டி, இந்த SIR-ல் 2003-ம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்களைக் கேட்கிறார்கள். இந்த நடவடிக்கை வாக்காளர்களின் குடியுரிமையை மறைமுகமாகச் சோதிக்கும் திட்டமாகவே இருக்கிறது.
சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமையான வாக்குரிமையைப் பறித்து, அவர்களை மதிப்பற்றவர்களாக மாற்றுவதன் மூலம், 2035-ம் ஆண்டிற்குள் ஒரு வைதீக இந்து தேசத்தை (Vedic Hindu Nation) அமைக்கும் இலக்கிற்கு வழிவகுக்கும் முயற்சி இது.

SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களை அடையாளம் காண்பது, அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பது, இதை சரியாக கண்காணிப்பது போன்ற காரணங்களால் வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் வழக்கமான தேர்தல் பணிகள் கடுமையாக பாதிக்கும்.
பீகாரில் இதே நடைமுறையில் கொண்டுவரப்பட்ட SIR காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேல், இதன் பிண்ணனியில் அரசியல் கட்சிகள் வேலை பார்த்தன. அதனால், கூட்டணி முடிவுகள், வேட்பாளர் தேர்வு என அனைத்து முடிவுகளும் தாமதமானது.
எனவே, அரசியல் கட்சிகள் சட்டப் போராட்டத்தை எதிர்கொள்வது, தேர்தல் பணிகளை மேற்கொள்வதுடன், நீக்கப்பட்ட வாக்காளர்களுக்காகச் செயல்படுவது என அரசியல் கட்சிகளுக்கு இந்த SIR பெரும் சுமையை ஏற்படுத்தும்.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது. ஏற்கெனவே பீகார் SIR விவகாரத்துக்காக நீதிமன்றம் சென்றபோதே, தேர்தல் ஆணையத்துக்கு ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொண்டது.
தி.மு.க அரசின் மனுவுக்கும் நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக SIR-க்கு தடை விதிக்காது. ஆனால் சிறிய நிவாரணங்களை வழங்க அதிக வாய்ப்புள்ளது. வாக்காளர்களை நீக்குவதற்கான நடைமுறைகளில் சட்டவிதிகளைப் பின்பற்றுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடலாம்." என நிதானமாகப் பேசினார்.













