மும்பையில் கைதான போலி விஞ்ஞானி; பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பா? -...
Doctor Vikatan: பிரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்; இது எந்த அளவுக்கு துல்லியமானது?
Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன. பீரியட்ஸ் தள்ளிப்போகும் போதெல்லாம் பிரெகன்சி கிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்க்கிறேன். இது எந்த அளவுக்குத் துல்லியமானது, தவறான ரிசல்ட் காட்ட வாய்ப்பிருக்கிறதா? வேறு எந்த விஷயங்களை எல்லாம் இதில் கவனிக்க வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
கர்ப்பத்தை உறுதிசெய்ய சிறுநீர்ப் பரிசோதனைதான் செய்யப்படும். அந்தப் பரிசோதனையில், ரத்தத்தில் ஹெச்.சி.ஜி (Human Chorionic Gonadotropin) என்ற ஹார்மோன் இருக்கிறதா, இல்லையா என்பதைக் காட்டிக் கொடுக்கும். ஆனால், அதில் ஹெச்.சி.ஜி அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் காட்டாது.
கர்ப்பம் தரித்ததும் உடலில் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் உருவாகும். அதாவது கரு பதியத் தொடங்கிய பிறகு, இது ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு நிகழ்ந்த 6 முதல் 10 நாள்கள் கழித்து, கர்ப்பம் தரித்திருந்தால் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் உற்பத்தியாவது நடக்கும்.
உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது 28 நாள்களுக்கொரு முறை சரியாக வருவதாக வைத்துக்கொள்வோம். கடந்த மாதம் 14-ம் தேதி பீரியட்ஸ் வந்திருந்து, அடுத்த மாதம் அதே தேதியில் வராவிட்டால், 15-ம் தேதியன்று நீங்கள் டெஸ்ட் செய்து பார்க்கலாம். அதற்கு முன்பு டெஸ்ட் செய்து பார்ப்பதில் அர்த்தமில்லை.

எப்போதுமே காலையில் வெளியேற்றும் முதல் சிறுநீரை எடுத்துதான் இந்த டெஸ்ட்டை செய்யச் சொல்வோம். அந்தச் சிறுநீர் அடர்த்தியாக இருக்கும். அதில் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் அளவு அதிகமாக இருக்கும்.
கர்ப்பம் தரித்திருந்தால், இந்த டெஸ்ட்டில் 97 முதல் 99 சதவிகிதம் துல்லியமாகச் சொல்லிவிடும். அதை 'சென்சிட்டிவிட்டி' (Sensitivity) என்று சொல்வோம்.
அடுத்து ஸ்பெசிஃபிசிட்டி (Specificity). அதாவது டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று வந்தால், அது கர்ப்பம் தரித்திருப்பதை 99 சதவிகிதம் உறுதிசெய்கிற விஷயத்தை ஸ்பெசிஃபிசிட்டி என்று சொல்வோம்.
அடுத்து 'ஃபால்ஸ் நெகட்டிவ்' (False negative) என்றொரு விஷயம் குறிப்பிடுவோம். அதாவது கர்ப்பம் இருக்கிறது, ஆனால் இல்லை... என்பதைக் குறிப்பது. இப்படிக்கூட நடக்குமா என்றால், அதற்கு 1 முதல் 2 சதவிகித வாய்ப்பு இருக்கிறது.

ரொம்பவும் சீக்கிரமே டெஸ்ட் செய்யும்போதோ, முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்களுக்கோ, நிறைய தண்ணீர் குடித்ததன் விளைவாக, சிறுநீர் ரொம்பவும் நீர்த்திருந்தாலோ, டெஸ்ட் செய்யத் தெரியாவிட்டாலோ, இப்படி நடக்கலாம். அல்லது பிரெக்னன்சி டெஸ்ட் கிட்டில் ஏதேனும் கோளாறு இருப்பதும் காரணமாகலாம்.
அதே போல 'ஃபால்ஸ் பாசிட்டிவ்' (False positive) என்றும் காட்டலாம். அதாவது கர்ப்பம் இல்லை, ஆனால் இருப்பதாகக் காட்டும். இதற்கும் கிட் பிரச்னையால் நிகழலாம். குழந்தையின்மை சிகிச்சையில் இருப்போர் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவாக இருக்கலாம். கருச்சிதைவின் காரணமாக இருக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















