'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை, அதீத களைப்பு; வேலைதான் காரணமா?
Doctor Vikatan: நீண்டகாலமாக வேலை தேடிக் கொண்டிருந்த எனக்கு, சமீபத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், நைட் ஷிஃப்ட் வேலைதான் கிடைத்திருக்கிறது. ஒரு மாதமாக இந்த வேலையைப் பார்க்கிறேன். ஆனால், இதுவரை இல்லாத அளவு மிகவும் களைப்பாக உணர்கிறேன். பகலில் தூக்கமும் இல்லை. என்னுடைய திடீர் களைப்புக்கு என் நைட் ஷிஃப்ட் வேலைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்

களைப்பாக உணர ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடலாம். ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான உணவை சரியானதாகவும் சரியான நேரத்திலும் சாப்பிட வேண்டியது ஆரோக்கியத்துக்கு அடிப்படை.
இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு, பகலில் பட்டினி கிடப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பகலில் எனர்ஜி குறைவாக இருக்கும்.
எனவே, ஒவ்வொரு வேளை உணவுக்கும் சரியான இடைவெளி முக்கியம். அடுத்தது உறக்கம். ஆரோக்கியமான நபருக்கு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானது.
ஆனால், சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் அடுத்தநாள் காலையில் களைப்புடனேயே எழுந்திருப்பார்கள். உடல் பருமனானவர்களுக்கும் ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகாமல் போகலாம்.
நம் எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். அதை 'எட்டு எட்டாக ' மூன்றாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இரவில் 12 மணி நேரம் ஓய்வெடுக்கவும் பகலில் 12 மணி நேரம் வேலைசெய்யவும் ஏதுவாகத்தான் இயற்கையே நம் உடலை வடிவமைத்திருக்கிறது.
நீங்கள் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர் என்றால் வேலைக்குக் கிளம்புவதற்கு முன் எடுத்துக்கொள்ளும் உணவுதான் உங்களுக்கான பிரேக்ஃபாஸ்ட்.
நள்ளிரவு 12 மணிக்குச் சாப்பிடுவது லஞ்ச். காலையில் வீட்டுக்கு வரும்போது சாப்பிடுவது டின்னர். அதற்கடுத்த 12 மணி நேரம் ஓய்வெடுப்பதற்கானது. அந்த நேரத்தில் நீங்கள் சாப்பிட வேண்டியதில்லை.
அதாவது நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்கள், பகலை இரவாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கும் பலரும் பகலில் கிடைக்கிற நேரத்தை டி.வி பார்க்க, போன் பேச, வேறு வேலைகளைப் பார்க்கவெல்லாம் பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் ஆரோக்கியத்தை ஆபத்தை நோக்கித் தள்ளுகிறார்கள் என்றுதான் அர்த்தம். போதுமான நேரம் தூங்காத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இளவயதிலேயே நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
6 முதல் 8 நேரத் தூக்கத்தில்தான் உங்கள் உடல் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும். உடல் ஓய்வெடுத்துக்கொள்ளும்.

பகலில் தூங்கும்போது உங்கள் அறை, இருட்டாகவும் சத்தங்கள் இன்றியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பகல்தான் உங்களுக்கு இரவு என்பதால் பகலிலும் மீண்டும் சாப்பிடாதீர்கள். சரியாகத் தூங்காமலும் இரவில் மட்டுமன்றி பகலிலும் சாப்பிடுவதாலும் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கத் தொடங்கிய மூன்று முதல் நான்கு வருடங்களுக்குள் உங்கள் ஆரோக்கியம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.
நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்களும் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். இதையெல்லாம் சரியாகப் பின்பற்றினாலே உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடனடியாக உங்கள் உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொண்டாலே உங்கள் பிரச்னைகள் தானாகச் சரியாகும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















