டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனுமதி! - விவரம் என்ன?
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்கபாளையம் கிராமத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 27.10.2025 அன்று கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவ, மாணவியர்களில் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கல்லூரியில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதைத் தொடர்ந்து, 28.10.2025 அன்றும் ஒரு சில மாணவ, மாணவியர்களுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மாணவ மாணவிகள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாள்களில் 128 மாணவ, மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் விடுதி உணவகத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இல்லாததால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் தங்கவிக்னேஷ், தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர், கல்லூரி விடுதிக்குள் அமைந்துள்ள கல்லூரி உணவக இருப்பு அறை, உணவு பரிமாரும் கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை ஆய்விற்கு எடுத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவின் பெயரில், 29.10.2025ம் தேதி முதல் 02.11.2025ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐந்து மாணவிகள் உயிரிழந்து உள்ளதாகவும் பரவி வரும் தகவல் வதந்தியானது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















