டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அங்கு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, கட்சி தொண்டர்கள் கூட மிக தூரத்தில் நிற்க வைக்கப்பட்டனர்.

திடீரென 2 நபர்கள் பாதுகாப்பு தடையை மீறி சாலையில் வேகமாக வந்தனர். திட்டமிட்டு நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்காக வந்தார்கள் என சந்தேகப்படுகிறோம். இந்தப் பிரச்னை தொடர்பாக காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
அந்தப் பகுதி என்பது இதற்கு முன்பாக சி.பி.ஆர் எம்பியாக இருந்த காலத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடம். கடந்த 2022-ம் ஆண்டு சங்கமேஸ்வரர் கோயில் முன்பாக கார் வெடிகுண்டு விபத்து நடைபெற்ற இடம். நாட்டின் மிகப்பெரிய தலைவர் வரும்போது, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

உண்மையாகவே அவர்கள் மது போதையில் தான் வந்தார்களா அல்லது இதன் பின்னணியில் தீவிரவாத இயக்கம் உள்ளதா என்பதை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக அரசு என்பதால் தான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. குற்றவாளிகளின் பெயர்களை கூட காவல்துறை சொல்லவில்லை. அவர்கள் மீதி ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் எப்படி சாதாரணமாக வர முடியும். உண்மையை கண்டறிந்து மக்களுக்கு சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும்போது, எவ்வளவு தைரியம் இருந்தால் இவர்கள் போவார்கள். காவல்துறை இந்த விஷயத்தை ஏன் திசை திருப்புவது சந்தேகமளிக்கிறது. காவல்துறை உண்மையை வெளி கொண்டு வரவில்லை என்றால், மத்திய அரசின் உதவியை நாடி நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.















