SIR: தமிழ்நாட்டில் நாளை தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Ex...
திருப்பதியில் ஏமாற்றம்: சொந்தமாக கோயில் கட்டிய விவசாயி - ஆனால் கடைசியில் நடந்தது என்ன?
ஆந்திராவில் தனியார் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலாசா-காசிபுக்கா பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி என்ற தனியார் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் திடீரென பக்தர்கள் கூட்டம் கூடியது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்பாராத விதமாக பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக குவிந்ததே இந்த துயர சம்பவத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சோக சம்பவம் குறித்து ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி விளக்கமளித்துள்ளார். அதில், இந்தக் கோயில் முழுவதும் தனியாருக்குச் சொந்தமானது என்றும், கோயில் நிர்வாகம் தொடர்பான எந்த தகவல்களும் அரசிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கோயில் கட்டப்பட்டதன் பின்னணி
திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் தனக்கு முறையான தரிசனம் கிடைக்காததால், தனது சொந்த விவசாய நிலத்தில் இந்தக் கோயிலைக் கட்டியதாக அதன் நிர்வாகி ஹரிமுகுந்த பண்டா தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்புதான் இந்தக் கோயில் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், "திருப்பதிக்கு சென்றபோது பல மணி நேரம் காத்திருந்தும், சில நொடிகளில் எங்களை வெளியேற்றிவிட்டார்கள். சரியாக தரிசனம் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் சொந்த நிலத்திலேயே கோயில் கட்டலாம் என்று யோசனை வந்தது.
கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனது விவசாய வருமானத்தைக் கொண்டு, யாரிடமும் நன்கொடை பெறாமல் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளேன்.
திருப்பதியிலிருந்து 9 அடி உயர வெங்கடேஸ்வரர் சிலை, ஸ்ரீதேவி, பூமாதேவி சிலைகள் கொண்டுவரப்பட்டு வேத பண்டிதர்களின் வழிகாட்டுதலின்படி கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் சுவர்களில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதை கதைகள் சிலை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காகத் தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபமும் கட்டப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார் ஹரிமுகுந்த பண்டா.
இந்த விபத்து குறித்து ஹரிமுகுந்த பண்டா கூறுகையில், "வழக்கமாக இரண்டாயிரம் பக்தர்கள் மட்டுமே வருவார்கள். ஆனால், இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.





















