ICC-ஐ விட அதிக பரிசுத் தொகையை அறிவித்த BCCI; கூடுதலாக சூரத் வைர வியாபாரியின் சர்...
நூடுல்ஸ், பிஸ்கெட் பாக்கெட்களில் ரூ.42 கோடி மதிப்புள்ள கஞ்சா; தாய்லாந்திலிருந்து மும்பைக்கு கடத்தல்
மும்பைக்கு விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் மும்பை விமான நிலையத்தில் ரூ.47 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடத்தல்காரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து வரும் பயணிகள் போதைப்பொருள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஆனால் அவர்களிடம் போதைப்பொருள் எதுவும் இல்லை. எனினும், அவர்களிடம் நூடுல்ஸ் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்கள் இருந்தன. அதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பாக்கெட்களை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவை அனைத்தும் ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா இலைகள் ஆகும். மொத்தம் 42 கிலோ கஞ்சா இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.42 கோடியாகும். மொத்தம் 21 பாக்கெட்கள் இருந்தன. அவற்றை கடத்தி வந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் கடந்த 3 நாட்களில் மும்பை விமான நிலையத்தில் ரூ.90 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விமானங்கள் மட்டுமல்லாது கப்பல் மூலமாகவும் போதைப்பொருள் மும்பைக்கு கடத்தி வரப்படுகிறது. இப்போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


















