அன்று Kapil Dev இன்று Harmanpreet Kaur! - இந்திய பெண்கள் அணி சாதித்த கதை! | ICC ...
லண்டன்: ``ரயிலில் பயணிகளுக்கு கத்திகுத்து; 8-வது நிமிடத்தில் கைது'' - சம்பவத்தை விளக்கும் காவல்துறை
இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை மாலை 6:25 மணிக்கு ரயில் ஒன்று புறப்பட்டது.
இரவு 7:42 மணிக்கு ரயிலில் இருந்தவர்கள் காவல்துறைக்கு அவசர அழைப்பு எண் மூலம் தொடர்பு கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹண்டிங்டன் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது ரத்தக் களறியுடன் 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் கத்தியுடன் வெளியே வந்தார். அவரை காவல்துறை கைது செய்து, ஆயுதத்தையும் மீட்டது.
அதைத் தொடர்ந்து சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தது. இதற்கிடையில், பல பயணிகள் பீதியுடனும், ரத்தத்துடனும் ரயிலிருந்து வெளியேறினர்.
அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் லண்டனில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து லண்டன் காவல்துறை நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், ``லண்டன் செல்லும் ரயிலில் கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரில், ஒருவர் குற்றச்சாட்டு இல்லாமல் விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் 32 வயது பிரிட்டிஷ் நபர்.
மேலும், இந்த கத்திக்குத்து சம்பவத்தை பயங்கரவாத செயலாகக் கருதவில்லை. இந்த தாக்குதலில் வேறு தொடர்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கான காரணத்தை விசாரித்து வருகிறோம்.
ரயிலிருந்து அழைப்பு வந்த 8-வது நிமிடத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்திருக்கிறோம். சிறப்பு துப்பறியும் குழு எங்கள் காவலில் உள்ள சந்தேக நபரின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். 5 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கின்றனர். ரயில்வே ஊழியர்களில் ஒருவர் கடுமையாகப் போராடி பயணிகளின் உயிரைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்.
அந்தக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. அவருக்கு எங்கள் வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டுள்ளது.


















