Doctor Vikatan: ``குழந்தையின் அப்பா யார்?'' - DNA டெஸ்ட் உறுதிசெய்யுமா? எப்படி ச...
திருவள்ளூர், பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம்: 6 வாரம் வேண்டுதல் செய்ய நரம்பு பிரச்னை தீர அருளும் ஈசன்!
சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது பேரம்பாக்கம். இங்கே ஈசன் சோழீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். நரம்பு சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது இந்த ஆலயம். வாருங்கள், இந்த அற்புத ஆலயத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்வோம்.
ஆதியில் இந்த ஈசனுக்கு குலோத்துங்க சோழீஸ்வர முடைய மகாதேவர் என்பதுதான் திருநாமமாக விளங்கியது. அதுவே பின்னாளில் சுருங்கி சோழீஸ்வரர் என்று மாறியது என்கிறார்கள்.
கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் இந்த ஈசனின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது அவரின் திருமேனியில் நரம்பு மண்டலம் ஓடுவதைப் போன்ற அமைப்பைக் காணமுடியும். அதனால்தானோ என்னவோ இந்த ஈசனை வேண்டிக்கொண்டால் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் தீர்கின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

கல்வெட்டுகளின் படி இந்த ஊருக்கு 'இரட்டைப்பாடி கொண்ட சோழநல்லூர்' என்று பெயர். இந்த ஆலயத்தை குலோத்துங்கச் சோழன் 1112 - ம் ஆண்டு கட்டினான் என்கிறது கல்வெட்டு.
சோழ மன்னர்களின் போர்ப்படைத் தளபதிகள் பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கி நிவந்தங்கள் அளித்துள்ளனர். இந்த ஆலயத்தில் மட்டும் மிகவும் பழைமையான 14 கல்வெட்டுகள் காணப்பட்டு படியெடுத்துப் பாதுகாத்துள்ளனர்.
விஜய நகரப் பேரரசின் அதிகாரிகளில் ஒருவரான வப்பலூர் ரேவச்சி ராவுத்தருக்கு திடீரென நரம்பு சம்பந்தமான நோய் தாக்கியது. பலவகையிலும் மருத்துவம் செய்தும் அந்த நோய் தீரவில்லை. அவர் ஒவ்வொரு ஆலயமாகச் சென்று வழிபட ஆரம்பித்தார்.
அப்படி தரிசனம் செய்துவரும்போது பேரம்பாக்கம் வந்து சோழீஸ்வரரை வழிபட்டார். ஈசனிடம் மனம் உருக வேண்டிக்கொண்டார். அந்த நாள் முதல் அவர்நோய் குறையத் தொடங்கி பூரண குணம் கிடைத்தது.
ஈசனின் மகிமையை உணர்ந்துகொண்ட ரேவச்சி ராவுத்தர் இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்து நிவந்தள் பல வழங்கினார். இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளாக ஆலய வளாகத்திலேயே உள்ளன.
இங்கே அன்னை காமாட்சியாக அருள்பாலிக்கிறாள். தென் திசை நோக்கி அருளும் இந்த அன்னைக் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள்பவளாம். ஆலயத்தில் அமர்ந்து அன்னையை மனமுருக வேண்டினால் அன்னையின் கால் கொலுசொலி கேட்குமாம். அவ்வாறு அன்னையின் கொலுசொலி கேட்ட பக்தர்கள் அநேகர் உண்டு என்கிறார்கள்.
அதேபோன்று அன்னையை வேண்டி நலம் பெற்றவர்கள் அன்னைக்குக் கொலுசு சமர்ப்பித்து வணங்குவார்கள். திருப்பாதங்களில் கொலுசை அணிவிக்க ஏதுவாக அன்னையின் திருமேனி அமைந்துள்ளது சிறப்பாகும்.
இங்கு பிராகாரத்தில் சக்திகணபதி, வள்ளி தெய்வசேனா சமேத முருகப்பெருமான், துர்கை, ஐயப்பன், நாகர்கள் ஆகிய தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

9 தல ஈசன் ஒன்று கூடும் ஆறுத் திருநாள்
இந்தத் தலத்தின் மற்றொமொரு விசேஷம், 'ஆறுத் திருநாள்.' பொங்கல் பண்டிகையை ஒட்டிக் கொண்டாடப்படும் பண்டிகைகளான போகி, சூரியப் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், ஐந்தாம் நாள் ஓய்வு நாள் ஆகியன கடந்ததும் ஆறாம் நாளை ஆறுத் திருநாள் என்று கொண்டாடும் வழக்கம் பழந்தமிழர் மரபில் உண்டு.
இந்த ஆறுத் திருநாள் என்பது மக்கள் தங்களின் விவசாயத்துக்கு உதவிய நீர் நிலைகளுக்குச் சென்று அவற்றை வழிபடும் திருநாள். பேரம்பாக்கத்தில் இந்த ஆறுத் திருநாள் விசேஷமாகக் கொண்டாடப்பட்ட செய்திகளை கூவபுராணம் முதலிய நூல்கள் தெரிவிக்கின்றன.

கூவம் நதி
இந்த ஆலயத்தின் தீர்த்தமாக விளங்குவது கூவம் நதி. அந்தக் காலத்தில் கூவம் மிகவும் முக்கியமான நதியாக ஓடியது.
ஆறுத்திருநாள் தினத்தன்று இந்தத் தலத்தைச் சுற்றியிருக்கும் கூவம், இலம்பயங்கோட்டூர், நரசிங்கபுரம், தக்கோலம், திருவாலங்காடு, திருப்பாசூர், சித்தம்பாக்கம், சிறுமணவை, கோட்டூர் ஆகிய 9 தலங்களில் உள்ள சிவாலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகளை இங்கு நதிக்கரைக்குக் கொண்டுவந்து உற்சவங்கள் கொண்டாடுவார்கள்.
பெரும் திருவிழாவாக ஆறுத் திருவிழா இங்கு நடைபெற்ற குறிப்புகள் நூல்களில் காணப்படுகின்றன.
நரம்பு நோய் தீர்க்கும் ஆறுநாள் அர்ச்சனை
நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறுவாரங்கள் திங்கள் கிழமைகளில் வந்து அர்ச்சனை செய்ய வேண்டும். சுவாமிக்கு பால், விபூதி ஆகியவற்றை பக்தர்கள் கொண்டுவர வேண்டும். அந்த விபூதியையும் வில்வப் பொடியையும் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தருவார்கள். விபூதியை இரவு உறங்குவதற்கு முன்பாக எங்கு வலியோ அங்கு நன்கு தடவிக்கொள்ள வேண்டும். காலையில் குளித்து முடித்து இந்த சுவாமியின் திருநாமத்தை 108 முறை சொல்லவேண்டும். பிறகு விபூதி, வில்வப்பொடி ஆகியவற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பருக வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நோயிலிருந்து குணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏழாவது திங்கள் கிழமை வந்து மகாஅபிஷேகம் செய்து பரிகாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்கள்.

ஈசனுக்கு வைத்திய நாதன் என்கிற பெயர் உண்டு அல்லவா... உடல் பிணிகள் நீங்க நாம் அவரை வழிபட வேண்டும். அதேபோன்று பிறவிப் பிணிகளும் நீங்க அவரையே சரணடைய வேண்டும். அப்படிப்பட்ட மகிமை பொருந்திய பேரம்பாக்கம் சோழீஸ்வரரை ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஆனந்தம் பெருகுவதோடு ஆரோக்கியமும் நிலைத்திருக்கும்.
















