``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - த...
Doctor Vikatan: வயதுக்கேற்ற உயரம் இல்லாத டீன் ஏஜ் மகள்; 15-16 வயது பிறகு வளர்ச்சி நின்றுவிடுமா?
Doctor Vikatan: டீன் ஏஜில் இருக்கும் என் மகளுக்கு அந்த வயதுக்கேற்ற உயரம் இல்லை. 15-16 வயதுக்குப் பிறகு வளர்ச்சி நின்றுவிடும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா... வயதுக்கேற்ற உயரத்தைப் பெற ஏதேனும் வழிகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.
ஒருவரது உயரம் என்பது மரபியல் ரீதியாகவும் தீர்மானிக்கப்படுவது. அம்மாவிடமிருந்தோ, அப்பாவிடமிருந்தோ அல்லது இருவரின் மரபு வழியிலிருந்தோ வருவதுதான் நம் உயரம்.
பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை 14-15 வயதில் பூப்பெய்துவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு உயரம் அதிகரிக்க வாய்ப்பில்லை.
பருவ வயதை எட்டியபிறகு பிள்ளைகளின் வளர்ச்சி நின்றுவிடும். ஆண் குழந்தைகளுக்கு 15-16 வயது வரை வளர்ச்சி இருக்கும். உடலியல்ரீதியாக இப்படித்தான் எல்லோரும் படைக்கப்பட்டிருக்கிறோம். எனவே, இந்த வயதைத் தாண்டி அவர்களுடைய எலும்புகள் வளர்ச்சியடைய வாய்ப்பில்லை. அப்படிப் பார்க்கும்போது பூப்பெய்தியதிலிருந்து ஒரு வருட காலம்வரை மட்டுமே வளர்ச்சி இருக்கும். அதன் பிறகு நின்றுவிடும்.
எனவே, சப்ளிமென்ட் எடுப்பதன் மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ ஒருவரது உயரத்தை அதிகரிக்கச் செய்ய முடியாது. அது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவும் இல்லை. சிறுவயதிலிருந்தே குழந்தைகளை ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

சிறுவயதிலிருந்தே குழந்தைகளை ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுக்க வேண்டும். அது அவர்களுடைய எலும்புகளை உறுதியாக வளரச் செய்யும். ஓடியாடி விளையாடுவதால் உயரம் அதிகரிக்காது என்றாலும் உடல் உறுதியாகும். மார்க்கெட்டில் விற்கப்படும் ஊட்டச்சத்து பானங்கள், ஹெல்த் டிரிங்க்ஸ் போன்றவையும் உயரத்தை அதிகரிக்காது என்பதைப் புரிந்துகொள்ளவும்.
உங்களுடைய பெண் குழந்தைக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் இருக்கின்றனவா, ஹார்மோன் கோளாறுகள் உள்ளனவா என்பதையெல்லாம் மருத்துவரிடம் அழைத்துச்சென்று தெரிந்துகொள்வதும் அவசியம். உயரத்தை அதிகரிக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுக்கும் மருந்துகள், சிகிச்சைகள் போன்றவற்றை நம்பாதீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.















