US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்...
திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' - சிறப்பு என்ன?
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்று முடிந்தன. இந்த விழாவில், உள்நாடு மட்டுமின்றி குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பக்தர்கள், என சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டனர்.

திருக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலில் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறிட நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கைகளை செலுத்தி இருந்தனர். அந்த உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள், திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ரூ.4,26,22,507 ரொக்கப் பணமும், 1.279 கிலோ தங்கமும், 30.857 கிலோ வெள்ளியும், 46.312 கிலோ பித்தளையும், 7.77 கிலோ செம்பும், 8.91 கிலோ தகரமும் காணிக்கையாக கிடைத்துள்ளன. அத்துடன் 1,421 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன.
இதில், காணிக்கைகளுக்கு நடுவே 54 வெள்ளிக்காசுகள் கொண்டு கோர்க்கப்பட்ட மாலை ஒன்று கிடைத்துள்ளது. அந்த வெள்ளி மாலை, இரண்டு அடுக்காக உள்ளது. அதில் ஒரு புறத்தில் சரஸ்வதி, லட்சுமி மற்றும் விநாயகர் உருவமும், மறுபுறம் முருகனின் அட்சரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்கள், திருக்கோயில் அதிகாரிகள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

தமிழகத்திலுள்ள முதுநிலை கோயில்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற வெள்ளிக்காசுகள் கொண்ட மாலை கிடைக்கப்பெறவில்லை என்கின்றனர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்கள்.
















