குமரி: ``கல்குவாரிகள் உருவாக பொன்னாரும் தளவாய்சுந்தரமும்தான் காரணம்'' - அமைச்சர்...
சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்!
தட்சிணாமூர்த்தியே குருவடிவம். அவரை வழிபட்டால் சகலவிதமான ஞானமும் கிடைக்கும். மேலும் வாழ்வில் இருக்கும் தடைகள் விலகி நன்மைகள் கூடிவரும். சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தி விசேஷ வடிவுடன் அருள்பாலிப்பார். அப்படிப்பட்ட தலங்களுக்குச் சென்று வந்தாலே வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும். அப்படி ஒரு தலம் தாம் ஓமாம்புலியூர்.
புலியூர் என்றாலே புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்ட தலம் என்று பொருள். அவற்றுள் பஞ்சப் புலியூர் எனப்படும். முதலாவது பெரும்பற்றப் புலியூர் எனப்படும் சிதம்பரம். இரண்டாவது திருப்பாதிரிப்புலியூர். மூன்றாவது எருக்கத்தம்புலியூர். நான்காவது பெரும்புலியூர். ஐந்தாவது ஓமாம் புலியூர். இந்த ஐந்து புலியூரையும் தரிசனம் செய்தாலே சிவனருள் கட்டாயம் கிடைக்கும். அதிலும் ஐந்தாவது புலியூரான ஓமாம் புலியூர் தனிச்சிறப்பு வாய்ந்தது.

சிதம்பரம் பைபாஸிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது ஓமாம்புலியூர். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து மணல்மேடு வழியாக வந்தாலும் இத்தலத்தை அடையலாம்.
இங்கே ஈசன் துயர்தீர்த்த நாதர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். அம்பாளுக்கு 'பூங்கொடிநாயகி' என்பது திருநாமம்.
நந்தியை வணங்கி ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் நாம் பூங்கொடி நாயகியை தரிசிக்கலாம். அம்பிகைக்கு வலப்புறத்திலேயே பிரமாண்டத் திருமேனியராக அருள்பாலிக்கிறார் தட்சிணாமூர்த்தி.
பொதுவாக கோஷ்டத்தில்தான் நாம் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்வோம். இங்கே ஆலய மண்டபத்திலேயே அம்பாளுக்கும் ஈசனுக்கும் இடையில் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய முடிவது சிறப்பு.
அமைதியும் அழகும் ததும்பும் திருமுகத்துடன் விளங்கும் தட்சிணாமூர்த்தியின் திருவடிகளில் வழக்காமாக அமர்ந்திருக்கும் சனகாதி முனிவர்கள் இல்லை. மாறாக புலிக்கால் முனிவரும் பதஞ்சலியும் அமர்ந்து உபதேசம் பெறுகிறார்கள்.

தட்சிணாமூர்த்தியை வணங்கிவிட்டு ஈசனை தரிசிக்கச் சென்றால் அந்த சந்நிதியின் அதிர்வுகளை நம்மால் உணரமுடியும்.
சதுர ஆவுடையாரில் அமைந்திருந்த பாணமாக வழக்கத்தைவிடக் கொஞ்சம் பெரிய திருமேனியாகத் தெரிந்தார் சுவாமி.
சுவாமிக்கு பிரணவ வியாக்ர புரீஸ்வரர் என்பது திருநாமம். துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் என்றும் சொல்லுவார்கள். ஒருமுறை அம்பிகைக்குப் பிரணவ மந்திரத்தின் பொருளை ஈசன் உபதேசம் செய்ய அப்போது அம்பிகையின் கவனம் சிதறியது. இதைக் கண்ட ஈசன், அம்பிகை பூவுலகில் அவதரித்து சிவபூஜை செய்து பிரணவ மந்திர உபதேசம் பெறக் கட்டளையிட்ட்டார்.

அந்த வகையில் அம்பிகையும் இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட ஈசன் தட்சிணாமூர்த்தியாகத் தோன்றி பிரணவ மந்திரத்தை அம்பாளுக்கு உபதேசம் செய்தார் என்கிறது தலபுராணம். அதனால்தான் இங்கே தட்சிணாமூர்த்தி விசேஷம். வழக்கமாகக் கோயில்கள் மண்டபங்களில் அம்பிகைக்கும் ஈசனுக்கும் நடுவில் தட்சிணாமூர்த்தி அமைவது இல்லை. இந்தத் தலத்தில் மட்டும் அமைந்திருக்க அதுதான் காரணம் என்கிறார்கள் கோயிலைச் சார்ந்தவர்கள்.
இங்கு வந்து ஈசனை வணங்கி தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் தரிசனம் செய்துவழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும்.
குறிப்பாக நவகிரக குருவால் உண்டாகும் சிக்கல்களைத் தீர்த்து அருள்வார் இந்த தட்சிணாமூர்த்தி என்பது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக மீனராசிக்காரர்கள் இங்கு அந்து வழிபட வாழ்க்கை வளமாகும் என்பது நம்பிக்கை.
ஜாதகத்தில் குருபலம் இல்லாதவர்கள், கோசாரத்தில் குரு மறைவு பெற்றவர்கள் இங்கே வந்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கி குரு கடாட்சம் பரிபூரணமாக விளங்கும் என்பது நம்பிக்கை.

பிராகாரத்தில் முருகப்பெருமான், சரஸ்வதி, மகாலட்சுமி, இரட்டை விநாயகர், அனுமன், ஐயப்பன், நடராஜர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.
திருநாவுக்கரரசரும் திருஞானசம்பந்தரும் இத்தலம் குறித்துப் பாடியிருக்கிறார்கள். கோஷ்டத்திலும் ஒரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இப்படி ஒரே ஆலயத்தில் இரு தட்சிணாமூர்த்தி அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. அதனாலேயே இத்தலம் குரு பரிகாரத் தலங்களில் முக்கியமானதாகிறது.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை ஓமாம் புலியூர் சென்று வாருங்கள். உங்கள் தலையெழுத்தை மாற்றி ஏற்றம் மிகுந்த வாழ்வைத் தருவார் ஈசன்.
















