''எங்களுக்கு குப்பை வேண்டாம்!" - டிரெண்டாகும் #BoycottMajorRavi ஹாஷ்டேக் - பின்...
Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும் பிரதமர் மோடி!
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
டெல்லி கமிஷனர், "இன்று மாலை 6:52 மணியளவில் மிகவும் மெதுவாக வந்து சிகப்பு விளக்கு அருகே நிறுத்தப்பட்ட கார் வெடித்துள்ளது. சக்திவாய்ந்த வெடிப்பால் அருகில் இருந்த கார்களும் சேதமடைந்துள்ளன. FSL முதல் NIA வரை அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளன. சிலர் இறந்துள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர். நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். உள்துறை அமைச்சர் எங்களை அழைத்தார், அவரிடம் தகவலைப் பகிர்ந்துள்ளோம்." எனக் கூறியிருக்கிறார்.
தீயணைப்பு துறையினருக்கு 7:05 மணியளவில் அழைப்பு வந்ததாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Delhi-யில் குவிந்த பாதுகாப்பு அமைப்புகள்
சூழ்நிலையை பிரதமர் மோடி ஆய்வு செய்வதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரிடம் நிலைமையை விளக்கியுள்ளார்.
தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தடயவியல் துறை குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழுவும், சி.ஆர்.பி.எஃப் டி.ஐ.ஜி-யும் முன்னதாகவே சம்பவ இடத்திற்கு வந்து சேதத்தை கணக்கிட்டனர்.
தமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்
கார் வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் காவல்துறையினர் விழிப்புடன் இருக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சென்னையிலும் கோவையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்கெட் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவை நகர காவல் ஆணையர் A சரவண சுந்தர், "வழக்கமாக இரவு ரோந்து பணியில் 300 காவலர்கள் ஈடுபடுவார்கள். இன்று 600 ஆக உயர்த்தியிருக்கிறோம். நகரம் முழுவதும் வாகன சோதனை நடைபெறுகிறது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணி மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.















