Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும...
``அதிமுக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" - ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாவட்டத்தில் டி எம் எஸ் எஸ் பள்ளியில் காணொளி காட்சி மூலம் அன்புச் சோலை திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ``அன்புச் சோலை என்பது நல்ல திட்டம். இதே போல் முதியவர்களுக்கு தாயுமானவர் திட்டம் என பல்வேறு திட்டங்கள் மக்களை நோக்கி செல்லக்கூடிய திட்டங்களாக உள்ளது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்யக்கூடிய சிறந்த முதல்வராகவும், அரசாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இருந்து வருகிறார். இரண்டு மாதங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தற்போது எஸ்.ஐ.ஆர் மூலம் சேர்ப்பது, முழு விவரங்களை வெளியிடுவது, குறைகளை நீக்குவது, இதற்கான கால அவகாசங்கள் இல்லை. தேர்தலை முடித்த பின்பு ஒரு வருடம் கூட எஸ்.ஐ.ஆர் நடத்துங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. தற்போது எதற்கு எஸ்.ஐ.ஆர் நடத்த வேண்டிய அவசியம் வந்துள்ளது.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு எஸ்.ஐ.ஆர் (SIR) க்கு கால அவகாசம் தேவை. இதில் தவறுகள் வந்து விடக் கூடாது. பல மாநிலங்களில் தேர்தல் முறைகேடுகளை செய்து மத்திய பாஜக அரசு வெற்றி பெற்று உள்ளது. அதே நிலையை தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்கின்றனர் அது நிச்சயமாக நடக்காது.
மத்திய அரசின் எஸ்.ஐ.ஆர் முயற்சி நடக்காது என்றாலும், வாக்குரிமை இல்லை என்றால் அனைவரும் வருத்தப்படுவார்கள். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவத்தில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அந்த விண்ணப்பம் செல்லாது என கூறுகின்றனர். எழுத்துப் பிழையால் செல்லாது என்றால் வாக்குரிமையை பறிப்பதற்கு எந்த சட்டத்தில் இடம் உள்ளது.

படிவத்தில் சிறிய பிழைகள் வந்தால் அதற்கு மீண்டும் படிவம் கொடுக்க மாட்டார்களாம். அவர்கள் மீண்டும் வாக்காளர்களாக வர முடியாது. இது சரியானதா?" என்றார்.
போலி வாக்காளர்கள் மூலமாகத்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது என்று நத்தம் விசுவநாதன் கூறியது குறித்த கேள்விக்கு, ``இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள். இதுவரை போலி வாக்காளர்கள் வைத்து திமுக வெற்றி பெற்றோம் என எங்கேயாவது பேசினார்களா? அவர்களது பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினாரா? யாரும் பேசவில்லை. அவர்களுக்கு தேர்தலில் நம்பிக்கை இல்லை.
ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எதிலும் வெற்றி பெறவில்லை. இதற்கு காரணம் தலைமை சரியில்லை. மக்கள் அதிமுகவை நம்ப தயாராக இல்லை. அதிமுக ஓட்டு வங்கி 20 சதவீதத்திலிருந்து 18 சதவீதத்திற்கு கீழ் சென்றாலும் செல்லும். தேர்தல் வந்தவுடன் மக்களிடம் அழுது வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வர முடியுமா என பார்க்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை, கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" எனக் கூறினார்.
















