``அதிமுக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" ...
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!
ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் இருக்கும் பலருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து நடந்த ரெய்டில் டெல்லி அருகில் 350 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இப்போது நன்றாக படித்தவர்களை தங்களது இயக்கத்தில் சேர்ப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் டாக்டர் அடில் ரத்தேர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவை சேர்ந்த முஜாமில் சகீல் என்ற டாக்டரும் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தி ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் ரெய்டு நடத்தி 2563 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள பதேபூர் என்ற இடத்திலும் இமாம் ஒருவரின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தி லக்னோவை சேர்ந்த ஒரு பெண் டாக்டரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பெயர் சஹீன் என்று தெரிய வந்துள்ளது. அவரது காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில போலீஸார் இணைந்து கடந்த 15 நாட்களாக நடத்தி வரும் ரெய்டில் பெண் டாக்டர் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெண் டாக்டர் விசாரணைக்காக காஷ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மத பதட்டத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
டாக்டர்களை தங்களது திட்டத்திற்கு பயன்படுத்தினால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் தீவிரவாத அமைப்புகள் டாக்டர்களை இதற்கு தேர்வு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டாக்டர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீவிரவாத அமைப்புகள் அவர்களிடம் அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான சதித்திட்டம் பாகிஸ்தானில் தீட்டப்பட்டு காஷ்மீரில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர்கள் காயம் அடைந்த தீவிரவாதிகளுக்கு சிகிச்சையளித்துள்ளனர். அப்படி சிகிச்சையளித்தபோதுதான் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. டாக்டர்களை தங்களது தீவிரவாத செயல்களில் கூட்டு சேர்த்ததில் இமாம் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
படித்தவர்கள் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு வைத்திருப்பது பாதுகாப்பு மற்றும் விசாரணை ஏஜென்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து படித்த நல்ல உயர் பதவியில் இருப்பவர்களையும் அவர்களுக்கு வரக்கூடிய நிதி, அவர்கள் செலவிடும் நிதியையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


















