``இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது" - நடிகை கெளரி கிஷன்
குன்னூர்: திடீரென கலைந்த தேன்கூடு; அலறியடித்த பண்ணை பணியாளர்கள்!
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள வண்டிச்சோலை பகுதியில் வனத்துறையின் நாற்றாங்கால் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான தாவர நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகின்றனர். நாற்று உற்பத்தியில் பெண் பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை 6 பெண் பணியாளர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அருகில் இருந்த தேன்கூடு திடீரென கலைந்த நிலையில்,

நூற்றுக்கணக்கான தேனீக்கள் வெளியேறி அருகில் இருந்த பண்ணை பணியாளர்களை கொட்டியுள்ளன. வலியால் பெண்கள் அலறித்துடிப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள், தேனீக்களிடம் சிக்கிய பெண்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " 6 பெண்களை தேனீக்கள் கொட்டியுள்ளன. லேசான பாதிப்பு ஏற்பட்ட 5 பெண்களுக்கும் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனமணி என்ற பெண்ணிற்கு பாதிப்பு சற்று அதிகமாக காணப்படுவதால் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் இவர்கள் மீட்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் " என்றனர்.
















